Tuesday, August 23, 2011

ஜனநாயக போராட்டம்!

திரு. அண்ணா ஹஜாரே அவர்கள் 16/08/2011 தொடங்கி இன்றைக்கு எட்டாவது நாளாக தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். வலிமையான ஜன்லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அவர் போராடுகிறார். மிகவும் அமைதியாக, வன்முறை சிறிதேனுமில்லாமல், ஆபாசமோ பிறர்மீது காழ்ப்புணர்ச்சி கோஷங்களோ இல்லாமல் இப்படியொரு போராட்டத்தை காந்தீய வழியில் இன்றைய காலகட்டத்தில் நடத்த முடிகிறதென்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. காந்திஜி மறைந்து சுமார் 63 ஆண்டுகளுக்குப்பிறகும் அவருடைய அஹிம்சா நெறியில் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை ஒருவரால் நடத்த முடியும் என்பது காந்தீய கோட்பாடுகள் அழியாதவை என்பதையே காட்டுகின்றன. அண்ணாவின் சொல்லுக்கு இத்தகைய மாபெரும் எதிர்பாராத கூட்டம், மகுடிக்கு முன்னால் கட்டுண்டு கிடக்கும் நாகத்தைப் போல கிடக்கிறது என்பது சாதாரண அரசியல்வாதிகளுக்கு மாபெரும் வயிற்றெரிச்சலை உண்டாக்கி இருக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய ஒரு அஹிம்சா போராட்டத்தை எப்படியெல்லாமோ கொச்சைப் படுத்தி ஒழித்துவிட இந்த அரசு முயற்ச்சிகளை செய்து வருகிறது. அண்ணாவையே ஊழல் பேர்வழி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது கிறித்தவ, இசுலாமிய சிறுபான்மை மக்களை தூண்டி அண்ணாவிற்கு எதிராக அறிக்கை விட வைத்திருக்கிறார்கள். புது தில்லியிலிருந்து இந்திய கத்தோலிக்க பிஷப்பு பேரவையும், அகில இந்திய இசுலாமிய தனிநபர் சட்ட வாரியமும், தாருல் உலூமும், ஜமைத் உளம் இ ஹிந்த் என்ற அமைப்பும் அண்ணாவின் போராட்டம் சட்ட விரோதம் என்று அறிக்கை விட்டிருக்கின்றன. இனவெறி, கலவரம், ரகளை, கல்லேரிப்பு, சாலை மறியல், பேருந்து எரிப்பு காயம், உயிரிழப்பு என்று ஒரு நவீன போராட்டத்திற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் ஒரு தனி மனிதன் போராடுவதா? என்று வயிற்றெரிச்சல் கொண்டு இவை அறிக்கை விட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. இவர்களின் டிரேட் மார்க் போராட்டம் எப்படிப்பட்டது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். 

ஒடிசாவில் மதமாற்றம் செய்யும் ஒரு அந்நிய நாட்டவரை சமூக விரோத கும்பல் கொன்றுவிட்டது என்பதற்காக, சட்டம் அதன் கடமையை செய்து கொண்டிருந்த காலகட்டங்களிலேயே, தங்கள் ஆளுகையில் இந்தியாவிலிருக்கும் அனைத்து பள்ளிகளையும் மூடி, மாணவர்களின் பேரணி நடத்தி போராடியவர்கள் இந்த கத்தோலிக்க அமைப்பினர். பள்ளிகளை மூடுவது, குழந்தைகளை வைத்து பேரணி நடத்தி அவர்களின் படிப்பை பாழாக்குவது என்ன ஜனநாயக நடை முறை போராட்டம்தானா?

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சியை ஒரு இசுலாமிய நிறுவனத்தலைவர் புகழ்கிறார் என்பதற்காகவே அவரை தலைமை பதவியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்களே அது ஜனநாயக முறையிலான செயல்தானா? இந்தியாவில் மக்கள் மத்தியில் பிளவையும், பீதியையும் உண்டுபண்ணவே எல்லைக்கப்பாலிருந்து சிறுபான்மை இனத்தை சார்ந்த சமூக விரோதிகள் கண்ட இடங்களிலெல்லாம் குண்டுவைத்து மக்களை கொன்று குவிக்கிறார்களே? அதை கண்டிக்க மனமுமில்லாமல், திராணியுமில்லாமல் வேடிக்கைப்பார்த்து கொண்டிருக்கும் இசுலாமிய அமைப்புகள் ஜனநாயக பாதையையா பின்பற்றுகின்றன?

இதே வார்த்தையை முன்னால் சபாநாயகர் திரு.சோம்நாத் சட்டர்ஜியும் தெரிவித்திருக்கிறார். இவர் பின்பற்றும் கம்யுனிச அமைப்புகள் பந்த் என்ற பெயரிலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் என்ற பெயரிலும் கோடானுகோடி மக்களுக்கு இடையூறு விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் செயல் படுகிறார்களே அது என்ன ஜனநாயக வழிமுறைதானா?

இதற்கிடையில் நாடாளுமன்றம் இப்படித்தான் செயல்பட வேண்டும், இதைத்தான் செயல்படுத்தவேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாதாம். அரசியலமைப்பு நிறுவனங்களின் இறையாண்மை பாதிக்கப்படுமாம். பல அதி புத்திசாலி அறிவுஜீவிகள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். அண்ணா ஒன்றும் நாடாளுமன்றத்தை சிறுமை படுத்தவில்லை. அதன் மூலம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றுதான் கோருகிறார். இதில் எங்கே வந்தது 'உத்தரவு'? அலகாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் இந்திரா காந்தி பதவியில் தொடர்ந்தாரே அவர் நீதிமன்ற இறையாண்மையை மதிக்காத போது இந்த அறிவு ஜீவிகள் அவருக்கு புத்தி மதி சொல்லியிருக்கலாமே! மாநில அரசுகளை மத்திய காங்கிரஸ் அரசுகள் தங்கள் விருப்பப்படி கலைத்த காலங்களில் அது மாநில இறையாண்மையில் குறுக்கிடும் செயல் என்று இவர்கள் புத்திமதி கூறியிருக்கலாமே!

எந்த நாடாளுமன்றமும் தானாக ஒரு பணியை செய்யாது. ஆட்சி யிலிருப்பவரின் விருப்பப்படிதான் அது செயல்படும். யானைபாலம் வாய்ந்த பெரும்பான்மையை வைத்திருக்கும் ஆளும்கட்சி தலைவரின் விருப்பப்படிதான் நாடாளுமன்றத்தில் விவாதங்களோ, நடைமுறைகளோ இருக்கின்றன. அங்கே அவர்கள் விரும்பும் எண்ணங்களே சட்டமாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நடைமுறையையே மேற்கொள்ளுங்கள் என்று பெருபான்மை பெற்றுள்ள ஒரு பிரதமரை வற்புறுத்துவது எப்படி நாடாளுமன்ற நடைமுறையில் தலையிடுவதாகும்? நம்மையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொள்ள இந்த பிற்போக்கு அரசியல் வியாதிகளுக்கு உரிமை உள்ளதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால் அவர்கள் தங்களையல்லவா முட்டாட்கள் என்று ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள்? 

No comments:

Post a Comment