Monday, March 28, 2011

தமிழக தேர்தல் களம்

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இரு தரப்புமே இலவசங்களை அள்ளி வழங்க தயாராக உள்ளதாக கூறுகிறார்கள். எவர் வென்றாலும் தோல்வியை சந்திக்க உள்ளது தமிழினம். எப்படி என்று கேட்கிறீர்களா? மேலே படியுங்கள்.
தமிழனுக்கு இன்று தேவை தன்னம்பிக்கை, சுயமரியாதையுடன் கூடிய ஒரு வேலை? இவற்றுக்கு உத்தரவாதமில்லாத வெத்து வாக்குறுதிகள் தமிழனை தலை நிமிர செய்யாது. அடுத்தவனை நம்பியே தமிழர்கள் வாழ வேண்டும். சுய மரியாதை என்பது சிறிதுமில்லாமல், நாளைய தமிழினத்தை பற்றி கவலை கொள்ளாமல் அடுத்தவர்களை, குறிப்பாக மேலை நாட்டவரை நம்பியே வாழ வேண்டிய சூழலை உண்டாக்கி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தென் பகுதியில் தமிழகம் என்ற ஒரு மாநிலமாவது இன்று மிஞ்சி இருக்கிறது. அதையும் கூறுபோட்டுவிட்டு தமிழினம் என்ற ஒன்றை அடையாளமில்லாமல் அழிக்க முயன்றுவருகிறார்கள். நான் பட்டியலிட உள்ள சில தகவல்களை நடுநிலையோடு அலசி பாருங்கள். நீங்கள் உண்மையை உணர்வீர்கள். இது நாளைய நமது இனத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக எழுந்த சிந்தனை. தூற்றுபவர்கள் இந்த தளத்திலேயே தூற்றுங்கள். போற்றுபவர்கள் உங்கள் நண்பர்களுக்கு கூறுங்கள். 

1. இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று கூறினார்கள். இதை தமிழனை தவிர தீவிரமாக பின்பற்றிய முட்டாள் இந்தியன் யாருமிருக்க மாட்டார்கள். மக்கட்பேறு, பிள்ளை செல்வம், என்று நம் முன்னோர்களும் அவர்தம் அருந்தமிழ் நூல்களும் பெருமையாக பேசும் பிள்ளை பேற்றை கொச்சை படுத்தி விட்ட பெருமை மேல் நாட்டு நண்பர்களை சாரும். இப்படியே போனால் உலகில் தமிழன், இந்தியன் தொகை பெருத்து அவனுக்கு தாங்கள் சேவகம் செய்யும் நிலை வந்து விடுமோ என்று பயந்து அவர்கள் கட்டவிழ்த்து விட்ட அரை வேக்காட்டு தத்துவங்களை நேரு போன்ற மேல் நாட்டு மோகம் கொண்ட தலைவர்கள் பின் பற்றியதால் வந்த ஆபத்து, இன்று இந்தியாவில் கட்டுக்குள் வந்துவிட்ட, சுருங்கி கொண்டிருக்கிற இனமாக இருக்கிறது தமிழினம். கிட்டத்தட்ட நான்கு பாராளுமன்ற தொகுதிகளை இழக்க இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் காணமல் போய்விட்டன. அதாவது குமரி தமிழ் பேசக்கூடிய இருவர் வருகின்ற சட்டமன்றத்தில் இல்லாமல் இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் இன்று தொழில் தெரிந்த ஆட்கள் இல்லை. இன்ஜினீயர்கள் அதிகரித்து விட்டார்கள். அனால் பிளம்பிங் ஒயரிங் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் குறைந்து விட்டார்கள். நமது கிராமங்கள் வெறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அங்கே கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை பார்த்துகொள்ள மக்கள் இல்லை. முதியவர்கள் அந்நியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். வேலைக்கு ஆட்கள் இல்லாததால் பீகார் போன்ற வேற்று மாநிலத்திலிருந்து மனிதர்கள் இறக்குமதி ஆகிறார்கள். இங்கும் வெகு சீக்கிரத்திலேயே மும்பை, அசாம் போன்ற பகுதிகளில் காணப்படும் வேற்று மாநில மக்களுடனான பிரச்சனைகள் தோன்றலாம். தமிழ் நாட்டில் ஏற்கெனெவே தமிழ் இல்லை. இனி தமிழனும் இல்லை என்ற நிலை தோன்றலாம். நமது நிலங்கள் வீரியம் மிக்கவை. ஆனால் பயிர் செய்ய ஆட்கள் இல்லாமல் போவதால், குடும்பங்கள் சுருங்குவதாலும் அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்வது என்பது நடக்க கூடியதே. இதை நாம் எப்படி சரி செய்ய போகிறோம். சிந்திதர்கள நம் மானமில்லா தலைவர்கள். தமிழினம் சுருங்க காரணமான இந்த குடும்பக்கட்டுப்பாடு அவசியம்தானா? நம்மைப்போல கண்ணைமூடிக்கொண்டு குடும்பக்கட்டுப்பாட்டில் ஈடுபாடு காட்டாத பீகாரிகள் இன்று அகில இந்தியா முழுவதும் தங்கள் தொழில் பலத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாம் சிங்கிள் டீ கூட குடிக்க முடியாது. அனால் அதற்கு நேர்மறையாக தமிழர்களாகிய நாம் என்ன போராடினாலும் பாலாற்றில் கூட தண்ணீர் பெற முடியாது.
அமெரிக்கா, ஐரோப்பா, அரேபியா போன்ற நாடுகள் நம்மை பார்த்து சலாம் போடுவது எதற்கு? நம்மிடமுள்ள மனித வளம் தான். அதை இழந்து விட்ட பிறகு அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட எண்ணமாட்டார்கள். இப்படி ஒரு ஈன நிலைக்கு நம்மை நாமே ஆட்படுத்திக்கொண்டுவிட்டோம்.  மக்கள் தொகை உயர உயர நமது தேவையை நாம் உயர்த்தி இருக்க வேண்டும். சாலை, கட்டமைப்பு, வீடு, நீர்வளம், பயிர்வளம், போன்றவற்றை உயர்த்தி தன்னிறைவு காண்பதுதான் ஒரு சிறந்த பகுத்தறிவாக இருக்கமுடியும். அதற்காக குழந்தையை பெறாதே என்பது எப்படி சரியாக இருக்க முடியும்? அரை கிலோ அரிசிதான் உள்ளது. இது எனக்குமட்டுமே போதும் நீங்கள் அனைவரும் பட்டினியாக இருங்கள் என்று ஒரு தகப்பன் கூரினாநேயானால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. அதற்கு மாறாக அவன் தன்னுடைய உழைப்பை அதிகரித்து ஈட்டும் சக்தியை கூட்டி இருக்கவேண்டும். அதுதான் அழகு. குழந்தையை தவிருங்கள் என்று கண் மூடித்தனமாக சொல்வது செருப்புக்கு தகுந்தமாதிரி காலை வெட்டுவது போன்றதாகும்.

2. தொழில் வளம் பெருக நம்முடைய மாநில அரசுகள் தொடர்ந்து தவறி வருகின்றன. மாறாக நம்முடைய மக்கள் தங்களுடைய சுய முயற்சியின் காரணமாக தொழிலை சிறப்பாக நடத்தி வந்தால் அதற்கு பல இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள். விவசாய நிலம் சுகுங்கி வருவதை தடுக்க எந்த அரசும் முயற்சிக்கவில்லை. இலவச மின்சாரம், மானிய உரம் என்றெல்லாம் போக்கு காட்டி விவசாயிகளை கொச்சை படுத்தினார்களே தவிர அவர்கள் விவசாய தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முதற்கண் விவசாயம் செய்வதே படிக்காதவன், கைநாட்டு, உதவாக்கரை செய்யும் பணி என்ற ஒரு மாய மோசடிகளை அவிழ்த்து விட்டு மக்களை அந்த தொழிலை செய்ய விடாமல் செய்து விட்டார்கள். ஒரு அந்நிய நாட்டு கம்பெனியின் வாசலில் வாச்மேனாக அல்லது எடுபிடியாக இருக்க கூட நாம் தயாராகின்றோம். அனால் நம்முடைய நிலத்தில் விவசாயம் செய்வதை கௌரவ குறைச்சலாக எண்ணுகிறோம். இந்த நிலைக்கு இந்த அரசாங்கங்கள் நம்மை தள்ளிவிட்டன. நீர் வளம் இல்லாமல், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், தொழிலாளிகள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் விவசாயம் பாதிக்கபடுவது ஒரு புறம் என்றால், மேற்சொன்ன காரணமும் ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. 

3. அரசு உதவ முன் வராவிட்டாலும் பரவாயில்லை. அனால் உபத்திரவம் செய்யகூடாது. திருப்பூரில் எண்ணற்ற தொழிலாளிகளின் உழைப்பில் இன்று பின்னலாடை தொழில் ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இந்த தொழில் இத்தகைய உன்னத இடத்தை அடைந்து பன்னாட்டு கவனத்தை ஈர்க்கும் வரை அரசாங்கத்தின் உதவி என்பது வெறும் பூஜ்ஜியம்தான். பல சிறு மற்றும் குறு முதலாளிகள், எண்ணற்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை எதிர் பாராமல் வளர்த்துவிட்ட ஒரு தொழில் பங்கு பெற மட்டும் அரசாங்கம் வந்திருந்தால் பரவாயில்லை. ஒரு வருமான வரி தொழில் வரி என்று ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு போயிருப்பார்கள். அனால் அரசாங்கம் தகுந்த மின் விநியோகமில்லாமல் நகர கட்டமைப்பு வசதிகளை செய்யாமல் ஏற்றுமதிக்கு தக்க காரணிகளை பெருக்காமல் விட்டுவிட்டது. இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஓடாத நதியில் நீர்வளம் கேட்டுவிட்டது, காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு என்று ஏதேதோ காரணங்களைக்கூறி பல தொழிற்சாலைகளை மூட எத்தனித்து வருகிறது. அங்கு வெளியேறும் மாசு கலந்த நீரை தனி குழாய்கள் அமைத்து கடலில் கொண்டு சேர்க்க அரசுக்கு ஏராளமான செலவு பிடிக்குமாம். நானும் உதவ மாட்டேன், நீயாக ஏகலைவன் போல முன்னேறி வந்தாலும் விரலை வெட்டுவேன் என்று சொல்கிறது அரசாங்கம். எப்படி இருக்கிறது கதை?

4. படிக்க வேண்டும். பல உயர் பதவிகளுக்கு போகவேண்டும். நம் குடும்பத்தின் பெருமையை பறை சாற்றவேண்டும் என்றுதான் பல சராசரி தமிழர்களும் கனவு காண்கிறார்கள். பத்தாம் வகுப்பு தரம் கூட இல்லாத பல பிள்ளைகள் பி. ஈ., பி. டேக் போன்ற பல படிப்புகளை படித்துவிட்டு சராசரி பணிகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர ஏராளமானோர் சராசரி பணிகளில் சராசரிக்கும் கீழான சம்பளத்தை பெற்று வருகிறார்கள். இந்த அவல நிலையை இந்த அரசாங்கங்கள்தான் ஏற்படுத்தின. ஆளும் கட்சியை சார்ந்த பலருக்கு பொறியியல் மற்றும் தொழில் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேர ஆட்கள் வேண்டும். அதுவும் டொனேசன் கொடுத்து சேர வேண்டும். தரம் வேண்டும் என்று அவை வலியுறுத்துவதில்லை. தரத்தை நிர்ணயிப்பது மதிப்பெந்தானே ஆகையால் அவை மதிப்பெண்ணை வைத்துதானே மாணவர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அரசாங்கம் எப்படி உதவுகிறது என்று பாருங்கள். சுமார் நாற்பது அல்லது ஐம்பது மதிப்பெண்களை மட்டுமே பெற தகுதி வாய்ந்த மாணவனை என்பது தொண்ணூறு என்று மதிப்பெண்களை அள்ளி வழங்கி தேர்வு செய்கிறார்கள். ஐம்பது மதிப்பெண் மட்டுமே பெற்றால் அந்த மாணவன் சாதாரண அரசு கலைக்கல்லூரியில் குறைந்த செலவில் சேர்ந்து படித்துவிட்டு உடனடியாக ஒரு சராசரி வேலைக்கு விரைவாக சென்று தன் குடும்ப பொறுப்பை கவனிப்பான். அவனுக்கு தொண்ணூறு மதிப்பெண் வழங்கும்போது  பொறியியல் படிப்பு படிக்க ஆசை வருகிறது. பெற்றோர்களும் கனவில் மிதக்கிறார்கள். தங்களுடைய சொத்து சுகம் என அனைத்தையும் விற்று அடகு வைத்து மாணவனை தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். இவர்களை மேலும் சிக்க வைக்கவே வங்கிகளில் கடன்களும் கொடுக்கிறார்கள். தன்னுடைய தகுதிக்கு மீறிய படிப்பில் சேர்ந்த மாணவன் திணறுகிறான். தடுமாறுகிறான். தற்கொலை செய்து கொள்கிறான். மானவபருவத்தின் குறும்பு, சேட்டைகளை எல்லாம் இழந்து, இருபது வயதிலேயே அறுபது தோற்றம் கொடுத்துவிடுகிறான். அவனுக்கு உயர்ந்த பதவிகள் கிடைப்பது அபூர்வம். இன்போசிஸ் நாராயணமூர்த்தி "இப்பொழுது வரும் இஞ்சிநீயர்களில் பெரும்பாலானோர் ஆங்கில மற்றும் பொது அறிவில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவனுக்கு எங்கள் நிறுவனத்திலேயே பயிற்சி அளித்து எங்களுக்கு தேவையான பணிகளில் ஈடு படுத்தி கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம்" இத்தகைய கல்வி முறைகளினால் நம்முடைய குடும்பங்கள் கடனாளியானதோடு மட்டுமல்லாமல் கல்வி ஒரு வர்த்தகமாகி ஒரு சில பண முதலைகள் மட்டுமே கொழுத்து வருகின்றன.

5. அரசு ஊழியர்கள் ஒழுங்காக பணி செய்வதில்லை. லஞ்சம் பெறுகிறார்கள். ஊதிய உயர்வு கேட்டு அடிக்கடி வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று நாம் எப்பொழுது பார்த்தாலும் குற்றம் சொல்லுகிறோம். அனால் இத்தகைய அரசு பணிகளுக்குத்தான் நம்முடைய பிள்ளைகளை அனுப்ப துடிக்கிறோம். விதி விளக்காக சிறப்பாக பணி செய்யும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் இந்த அரசு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. தவறு செய்யும் அரசு ஊழியர்களை நம்மில் எத்தனைபேர் தட்டிகேட்கிறோம். லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க நாம் தவறுகிறோம். போட்டிபோட்டுக்கொண்டு லஞ்சம் கொடுக்கிறோம். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை உடைக்க செய்யும் செயல்களுக்கு நாம் ஆதரவு தருவதில்லை. பாவம் என்று தவறானவர்களுக்கு பரிந்து பேசுகிறோம். விளைவு இன்று ஒட்டு மொத்த அரசு எந்திரமே வேலை செய்ய லாயக்கற்றதாக செயலிழந்து நிற்கிறது. தரிசு நில கணக்கெடுப்பில் குளறுபடி, லட்சக்கணக்கில் போலி குடும்ப அட்டைகள் வழங்கியது, இறந்து போனவர்களுக்கும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவது, சாதி சான்றிதழ் வழங்குவதில் மோசடி, போலி மதிப்பெண் பட்டியல் தருவது, போலி மருந்துகளின் நடமாட்டத்தை பெருக்கியது, மணல் திருட்டு, அரிசி கடத்தல், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயல் படுவது, ஒரே நிலத்தை பலருக்கு பதிவு செய்வது, அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட வரம்புக்கு மேல் அனுமதி வழங்குவது, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று கண்டனங்களை சந்திப்பது, ஏழை மக்களின் நிலங்களை வரம்பின்றி கையாக படுத்தி அதை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மற்றும் பெரிய பணமுதலைகளுக்கும் தாரை வார்ப்பது என்று எண்ணற்ற குற்றங்களை செய்து வருவதிலிருந்தே நாம் இந்த அரசும் அதன் இயந்திரமும் என்ன லட்சணத்தில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.