Tuesday, May 24, 2011

நாக்-அவுட்

இராமநாதபுர மாவட்டத்தை சார்ந்த சரிதா என்கிற பெண்மணி கடந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தனது நாவை அறுத்து காணிக்கை செலுத்துவதாக (இது போன்ற உணர்ச்சிவயப்பட்ட கிறுக்குத்தனங்கள் தமிழகத்திற்கே உரியவை) தமது கிராமத்திலிருக்கும் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அவ்விதமே அவரது விருப்பமான அணி வெற்றி பெற்றவுடன் 13/05/2011 அன்று தமது காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை நிறைவு செய்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்தன. 

இதை பார்த்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அந்த பெண்மணியை சென்னைக்கு வருவித்து அவரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவர் குணமடைந்தவுடன் அவரை கோட்டைக்கு அழைத்து இது போன்ற அசட்டு செயல்களில் ஈடுபட கூடாது என்று அறிவுரை வழங்கினார். அந்த பெண்மணி கணவனால் கைவிடப்பட்டவர் என்பதும், இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார் என்பதையும் அறிந்து அவருக்கு சத்துணவு உதவியாளர் பணியை வழங்கி கை கொடுத்திருக்கிறார். அதோடுகூட ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி அனுப்பி வைத்திருக்கிறார். உளம் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி சரியாக பேச்சு வராத நிலையிலும் முதல்வருக்கு உணர்ச்சிப்போங்க நன்றிகூறி சென்றார். அரசியல் கிறுக்குத்தனமான இந்த நிகழ்ச்சியில் பொது மக்களாகிய நாம் கவனிக்க வேண்டிய கூறுகள் பல உள்ளன. 

ஒன்று, ஜெயலலிதாவின் செயல்பாடு பற்றியது. தங்கள் சுயநலனுக்காக தொண்டர்களை பலிகொடுக்கும் அரசியல் வாதிகள் பலரிடையே ஜெயலலிதா தனிமைப்பட்டு இருக்கிறார். தொண்டர்களை தீக்குளிக்க செய்து அதில் தம்மை உயர்த்திக்கொள்வார் பலர் உண்டு. பிறகு தீக்குளித்த அந்த தொண்டர்களின் குடும்பங்களை பற்றி அவர்கள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு தமது நாவை அறுத்த அந்த தொண்டருக்கு புத்திமதி கூறியதுடன் அவருடைய குடும்ப நலனை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு பணி வழங்கியுள்ளார். அதோடு அவருக்கு வழங்கிய ஒரு லட்சம் நிதியை அரசு கஜானாவிலிருந்து வழங்காமல் கட்சியால் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நிதியிலிருந்து வழங்கியுள்ளார். அரசுபணியும் நாவை அறுத்துக்கொண்ட நன்றிக்காக என்றில்லாமல் கணவனால் கைவிடப்பட்ட மகளிர் என்ற வகையிலேயே வழங்கியுள்ளார். அப்போல்லோ மருத்துவ மனையில் அவருக்கு அளிக்கப்பட சிகிச்சைக்கான செலவையும் அவரே ஏற்றிருக்கிறார். இதிலும் அரசுபனத்தை துஷ்பிரயோகம் செய்ய வில்லை. இத்தகைய ஜெயலலிதாவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. 

இரண்டு அந்த பெண்மணியை பற்றியது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் விரும்பும் அல்லது நேசிக்கும் தலைவர் உயர்ந்த நிலையை பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் கோடானுகோடி தொண்டர்கள் உள்ள மாநிலம் இது என்பதை நினைவூட்டியுள்ளார். அதற்காக உணர்ச்சி மேலீட்டால் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தமது நாவையே தம் இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக்கியுள்ளார். அவருடைய செயல்பாடு நாகரீகமடைந்த நம் சமுதாயத்தில் கண்டனத்திற்குரியது என்றாலும், அன்பு மேலீட்டால் அவர்கள் செய்த செயலை அத்தகைய அன்பை நாம் அனுபவிக்குமபொழுதுதான் உணரமுடியும். களங்கமற்ற அன்புக்கு இத்தகைய நிகழ்வுகள் உதாரணமாக திகழ்கின்றன. 

மூன்று, அவள் வேண்டிக்கொண்ட தெய்வத்தின் கருணை பற்றியது. கணவனால் கைவிடப்பட்டு, இரண்டு பெண்குழந்தைகளின் கேள்விக்குரிய எதிர்காலத்துடன் கலங்கி நிற்கின்ற பெண்மணி இத்தகைய ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றுகிறாள் எனும் பொழுது கிராமம்தோறும் இருக்கும் காவல் தெய்வங்கள் அவளுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்க்கின்றன. அவளை முதலமைச்சரின் கவனத்திற்கு ஈர்த்து அவளுக்கு ஒரு வேலைவாய்ப்பை வழங்கி அவளுடைய குழந்தைகளின் வாழ்விற்கு வளத்தை சேர்த்திருக்கின்றன. அசைக்க முடியாத பிரதிபலன் கருதாத தெய்வ பக்தி நிறைந்த பலனை கொடுக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி.

Friday, May 20, 2011

ஆற்றங்கரை மரமும் ...

இன்றைய தினம் (20/05/2011) உண்மையிலேயே ஆச்சரியமும் அதிசயமும் கலந்த ஒரு நிகழ்வை இந்திய திருநாடு கண்டிருக்கிறது. ஆம். 2G ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கும் ஒரு கட்சியின் தலைவரின் மகள் இந்தியாவில் கைது செய்யப்படுவது என்ன அவ்வளவு சுலபமான விஷயமா? சமீபத்தில் தான் தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் கை மாறியது. அதுவரை அரசு பொறுப்பிலிருந்த கட்சியின் ஒரு சாதாரண மாவட்ட, வட்ட பொறுப்பாளர்களின் உறவினர்களை கூட போலிசு தொட முடியாத நிலையிலிருந்து அந்த கட்சியின் மிகப்பெரும் சக்தியான அதன் தலைவரின் மகளையே திஹார் சிறையிலிட முடியும் என்றால், தமிழக வாக்காளர்கள் கொடுத்த அசைக்க முடியாத தீர்ப்புத்தான் இதற்கெல்லாம் காரணம். ஜனநாயகத்தின் மீதும் மற்றும் நம் நாட்டின் நீதி பரிபாலனத்தின் மீதும் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது இந்த செய்தி. 
கருணாநிதி என்ற ஒரு தனி மனிதரின் செயல் பாடுகளின் விளைவுதான் இன்றைய தினம் திஹார் சிறை வரை நீண்டிருக்கிறது. அரசியல் என்ற போர்வையில் அவர் செய்து வந்த பலவிதமான காரியங்கள் இன்று அவரை நிழல் போல துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. 
தமிழ், தமிழின உணர்வு, என்று மொழி வெறியை மாநில மக்கள் மீது பரப்பி அதில் குளிர் காய்ந்த அதே நேரம், இலங்கையில் அப்பாவித்தமிழர்கள் கொடுங்கோலர்களின் தாக்குதல்களுக்கு பலியான பொது மத்திய காங்கிரசு அரசின் மூலம் கிடைத்த பதவி சுக போகங்களையே பிரதானமாக எண்ணி வாய் மூடி மௌனம் சாதித்தது கொடுமை அல்லவா? இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு இறந்த போதெல்லாம் இந்திய பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி அதற்கு மேல் ஒரு துரும்பை கூட அசைக்காதது பாவம் அல்லவா?
வாஜ்பாய் அரசில் பங்கிருந்து மாறன் உடல் தகனம் செய்யும் மட்டும் இருந்துவிட்டு உடனடியாக பதவியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி மாறியது மிகப்பெரிய துரோகம் அல்லவா?
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரின் பெற்றோர்களை வைத்தே அவன் எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்ல வைத்தது பாவம் அப்பாவா?
தங்கள் பிள்ளை, பெண்களை இந்தி படிக்க வைத்து விட்டு மற்றைய தமிழர்கள் படித்து விடாமல் இருக்க போலி இந்தி எதிர்ப்பை காட்டியது கயமைத்தனமான பாவம் அல்லவா? அவ்வாறு இந்தி தெரிந்திருப்பதால்தான் தயாநிதி மாறனை மத்திய மந்திரியாக்கினோம் என்று கூசாமல் கூற நேர்ந்ததே அது துரோக பாவமல்லவா?
ஆரிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று ஒரு புறம் பேசிகொண்டே, மறுபுறம் பார்ப்பன வக்கீல்கள், பார்ப்பன டாக்டர்கள், பார்ப்பன பத்திரிக்கையாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் என்று ஏராளமானோருடன் நல்லுறவை வைத்து குலாவி வந்தது இன பாவமல்லவா?
கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசி, இந்து கடவுளர்களையும், வழிபாட்டு முறைகளையும் பழித்து, அவர்களின் பண்டிகைகளை கிண்டல் செய்து வந்த அதே வேளையில், தங்கள் குடும்ப பெண்கள், பிள்ளைகள் கோயில்களுக்கு செல்ல ஊக்குவித்து, தானும் மஞ்சள் துண்டு, பவழ மோதிரம், பட்டு வேட்டி என்று வேடம் தரித்து வந்தது கபட பாவமல்லவா?
பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதாவை எவ்வளவு அவமானப்படுத்த வேண்டுமோ அவ்வளவும் செய்து அவரை நாக்கூசும் வண்ணம் வசை மாறி பொழிந்து வந்த இவர்கள் ஒட்டு மொத்த பெண் இனத்தையே கொச்சை படுத்தியது கொடூர பாவமல்லவா?
 இப்படி ஏராளமான பாவங்கள் செய்து வந்ததின் விளைவு அவை இன்று வரை இவர்களை விட்டு அகலவில்லை என்பது தெளிவாகிறது. "ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழுமன்றே" என்ற வாக்கியங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. இறைவன் நமக்கு நல்ல வாழ்வை வளத்தை அளித்திருக்கும்போழுது அதன் மூலம் எளிய வாழ்க்கையை நடத்தி எளியோருக்கு உதவி புரிந்து வாழ வேண்டும். தலை கால் புரியாமல் ஆடினால் அது ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தும். 
இன்றைய நிலையில் கருணாநிதி சொல்லொணா துயரில் ஆழ்ந்திருப்பார். தன்னை கைது செய்து சிறையிலிட்டிருந்தாலும் அவருக்கு இத்தகைய துயர் இருந்திருக்காது. தாம் மிகவும் நேசிக்கும் தன் மக்கள் துயருறுகிறார்கள் என்பதை காணும் பொது அத்துயர் பன்மடங்காகிறது. உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் துயரங்கள் பலவகையாயினும் புத்திர சோகம் என்பது கொடுமையானது. தம் மக்கள் படும் அல்லலை காண எந்த பெற்றோராலும் முடியாது. 
தசரதன் ராமனின் பிரிவை தாங்கவொண்ணாது தன் உயிரையே மாயத்துக்கொண்டுவிட்டான். மகாபாரதத்தின் திருதராட்டிரனின் நிலையோ இன்னும் பரிதாபகரமானது. சிறு வயது முதல் தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தட்டி கேட்கவில்லை. அவர்கள் செய்யும் பாவ காரியங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட செய்தது அவனுடைய பிள்ளை பாசம். அவர்கள் நேர்மை, நியாயம், நீதி, தருமம் போன்ற நல்ல செயல்களை துளியும் மதிக்காமல் தீய செயல்கள் புரிவதிலேயே சிறந்து விளங்கும் படி செய்து விட்டது திருதராட்டிரன் அளித்த இடம்தான். அவர்களுடைய அத்தகைய செய்கை சொந்த சகோதரனின் மனைவியின் சேலையை உரிந்து மான பங்க படுத்தும் அளவிற்கு விசுவ ரூபம் எடுத்து விட்டது. அப்பொழுதும் அவன் வாய் மூடி அவற்றை ஆதரித்து வந்தானேயன்றி  அவர்களை தட்டிக்கேட்கவில்லை. அத்தகைய பிள்ளைப்பாசத்திற்கு அவன் அடிமைபட்டுக்கிடந்தான். அது அவர்களுடைய இனத்தையே அழித்தது. அத்தகைய ஒரு நிலையைத்தான் கருணாநிதியின் பிள்ளை பாசம் தி.மு. க.விற்கும் ஒரு மீள முடியாத அளவிற்கு தீங்கு பயத்திருக்கிறது.       

Saturday, May 7, 2011

"ஓ" போடாதீர்கள்!

இப்போதெல்லாம் 49(O) படிவத்தில் ஓட்டு போடுவது பாஷனாகிவிட்டது. எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி திருடர்கள்தான். ஆகவே என் எதிர்ப்பைக் காட்ட 49(O) படிவத்தில் வாக்கு செலுத்துகிறேன் என்று சட்டம் வேறு பேசுகிறார்கள். இதையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வாக்களிக்கும்வண்ணம் உரிய வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் நீதி மன்றமும் அறிவுறுத்துகிறது. போகிற போக்கைபார்த்தால் இந்த நாட்டில் கல்யாணம் செய்துகொள்ள மட்டுமே உரிமை உள்ளது, பிள்ளைக்குட்டி பெற்றுக்கொள்ள யாரையும் கட்டாயபடுத்த கூடாது என்று சட்டமும் போடச்சொல்லி நீதி மன்றங்கள் கூறினால் ஆச்சரிய படுவதற்கில்லை. 

நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்து ஆட்சி செய்துக்கொள்ள அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. அதில் குறைகள், நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். அதை களைய வேண்டுமே ஒழிய அந்த ஜனநாயக நடைமுறையையே கேலி செய்யும் விதமாகவும் அதை குட்டிச்சுவராக்கும் விதமாகவும் 49(O) போன்ற விதிமுறைகளை உருவாக்குவது கூடாது. 49(O) என்பது மக்கள் தங்களைத்தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முற்படும் ஒரு ஜனநாயக பணியில் இடையூறு விளைவிப்பதாகவே அமையும். ஒரு குழு, கூட்டம் அல்லது அமைப்பை சிறப்பாக வழிநடத்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டியது அந்த அமைப்பை சார்ந்த அனைவரின் பொறுப்பு. அனைவருமே அந்த தலைமை பதவிக்கு போட்டியிடலாம். அனால் போட்டியிடவும் மாட்டேன். கூட்டத்தில் உள்ள மற்றவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த மாட்டேன். போட்டியிடும் ஒவ்வொருவரிடமும் உள்ள குறைகளை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டி குறை கூறி அவர்கள் யாருக்கும் வாக்களிக்ககூடாது என்று 49(O) படிவத்தில் வாக்களித்து என் எத்ரிப்பை தெரிவிப்பேன் என்பது அவர்களின் கையாலாகாத பேடித்தனத்தைதான் பறை சாற்றுகிறதே தவிர வேறொன்றுமில்லை. இப்போதைக்கு இது ஒரு பாஷனாகவும் மாறிவிட்டது. 13/04/2011 அன்று நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 25000 பேர் இத்தகைய படிவத்தில் வாக்களித்துள்ளார்கள். இவர்களை என்ன சொல்ல. பெரும்பாலும் இவர்கள் அனைவரும் படித்தவர்களாகவே இருப்பார்கள். அடுத்தவர்களை குறைகூறியே காலத்தைக்கழிப்பார்கள். பொதுநலத்தில் அக்கறை இருப்பதைப்போல காட்டிக்கொள்வார்கள், உண்மையில் சுயநலமாகவே செயல்படுவார்கள். எவனுக்கு ஓட்டு போட்டாலும் திருடத்தான் போகிறான் என்று வரட்டு வேதாந்தம் பேசுவார்கள். எச்சைக்கையால் காக்காய் கூட ஓட்ட மாட்டார்கள். 

ஜனநாயக விரோத 49(O) படிவத்தை இனிமேலாவது ஒழிக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.