Tuesday, October 18, 2011

எதுக்கு ஓட்டு போடணும்?

ஜனநாயகத்தின் ஆணிவேர் தேர்தல்கள்தான். அதன் மூலமாகத்தான் மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு நிர்வாகத்தை நடத்திச்செல்வதோடு மக்கள் தொண்டாற்றவும் முடியும். அப்படிப்பட்ட தேர்தல்களை மிகவும் சிரமப்பட்டு, பல இன்னல்களை சந்தித்து, பலகோடி நிதியை செலவு செய்து இரவுப்பகலும் பல லக்ஷக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் நிம்மதியை தொலைத்து நடத்தப்படும் பொழுது அதில் பங்கேற்காமல் வெறுமனே இருப்பவர்கள் தங்கள் செய்கையை நியாயப்படுத்தும் விதமாக பல வறட்டு வாதங்களை முன் வைக்கிறார்கள். நாங்கள் எதுக்கு ஓட்டுப் போடணும்? ஒட்டுப்போடுவதால் எங்களுக்கு என்ன நன்மை? நாங்கள் போடாமல் இருப்பதினால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? என்று நீளமான வினாப்பட்டியலை கை வசம் வைத்திருக்கிறார்கள். இங்கே நாம் அந்த வினாக்களுக்கு உரிய பதிலை தரப்போகிறோம். ஏற்பவர்கள் பாராட்டுங்கள். நீங்கள் ஜனநாயகத்தின் பிள்ளைகள். மறுப்பவர்கள் உரிய பிரதி வாதங்களை முன் வையுங்கள் அதற்கு தக்க பதிலை தர தயாராக இருக்கிறோம். 
  • எதுக்கு ஓட்டுப் போடணும்?  
நிறைய பேர் கேட்கிற கேள்வி எதுக்கு ஓட்டுப்போடணும் என்பதுதான். ஓட்டுப்போடுவதால் ஒரு மக்கள் பிரதி நிதி தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அவர் மூலமாக அன்றாட பணிகள் செவ்வனே நடைபெறவேண்டும். சட்டம் இயற்றுவது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, வளர்ச்சிப்பணிகள், சமூக நல்லிணக்கம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என்று பல பணிகள் மக்களை சென்றடைய வேண்டியிருக்கிறது. இவற்றை செய்ய ஆட்கள் தேவை. ஓட்டுப்போட்டு ஒரு பொறுப்புள்ள பிரதி நிதியை தேர்ந்தெடுப்பதால் நாம் அவற்றை எந்த வித சிரமமும் இன்றி நடைமுறை படுத்த முடியும். அவ்வாறு இல்லாவிடில் நாட்டில் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும். வலிமையுள்ளவன் மற்றவர்களை அடக்கி ஆளும் நிலை ஏற்படும். சமூக விரோத கும்பல்கள் அதிகாரத்தை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட நாடுகள் இன்று பல உள்ளன. சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி அவை தவிக்கின்றன. இன்று அந்த நாடுகளில் கலவரங்களும், ஆயுதம் ஏந்திய புரட்சிக்காரர்களும் என்று நிலைமை போர்களமாகியுள்ளது. மக்கள் வாழ்வில் அமைதிக்கு சிறிதும் இடமில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படிப்பட்ட நிலைமை ஓட்டுப்போட்டு மக்கள் பிரதி நிதிகளை தேர்ந்தெடுக்கும் தன்மை கொண்ட ஜனநாயக நாடுகளில் இல்லை. ஆட்சி அதிகாரத்தை அடுத்தவனிடமிருந்து பிடுங்கிக்கொள்ள அந்நாடுகளில் சூதும் வாதும் செய்து அபகரிக்கும் அவலம் நிறைந்துள்ள இந்த காலங்களில் கூட ஒரு அமைதியான தேர்தல் மூலம் தங்கள் ஆட்சி அதிகாரத்தை அமைதியாக அடுத்தததாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் வசம் ஒப்படைக்கும் ஒரு இமாலய நிகழ்வு ஜனநாயக நாட்டில் மட்டுமே நிலவுகிறது. இந்த நிலை தொடர, நம் வருங்கால சந்ததிகளும் அமைதியான வாழ்வை மேற்கொள்ள நாம் ஓட்டுப்போட்டு நம் பிரதி நிதிகளை தேர்ந்தெடுக்கும் இந்த அருமையான நடைமுறையை மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த முறை நலிவுருவது நம் ஒவ்வொருவரின் வாழ்வும் நசிந்துப்போக காரணமாகிவிடும். அத்தகைய தன்மை தோன்ற நாம் இடம் கொடுக்கக்கூடாது. அதற்காகவே ஓட்டுப்போட வேண்டும். 

நம்மில் பலபேருக்கு, யாருமே நம்மை பொருட்படுத்துவதில்லையே, என்கிற ஏக்கம் இருக்கும். வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது மற்றைய பொது இடங்களிலோ யாருமே நம்மை சட்டை செய்யாமல் இருந்தால் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதோடு அது நாளடைவில் அடிமைத்தனமாக கூட மாறிவிடும். அதற்காகவே கூட நாம் வழிய சென்று பிறர் விஷயங்களில் தலையிடுகிறோம். யாரோ யாரிடமோ வழி கேட்கும்போது, நம்மை கேட்காவிட்டாலும் கூட, நாம் வலிய சென்று வழி சொல்லுவோம். நம்முடைய கருத்தை கேட்காத இடத்தில் கூட நம்முடைய கருத்தை சொல்லுவோம். யாராவது நம்மை கவனிக்க வேண்டும் என்று, விதவிதமாக சட்டை அணிவது, தலைமுடி அலங்காரத்தை மாற்றுவது, வாசனை திரவியங்களை பூசிக்கொல்லுவது, நமக்கென தனி உடல் மொழியை (Body Language) வகுத்துக்கொள்வது, உரக்க பாடுவது, ஓடும் ரயிலிலோ, பஸ்சிலோ, ஓடிச்சென்று ஏறுவது, என்று பலரகங்களில் நாம் சேட்டை செய்வது, பிறரின் கவனத்தை நம் பால் ஈர்க்க வேண்டும், அவர்கள் நம்மை பொருட்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இப்படிப்பட்ட மனிதன் தன்னை இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகத்தின் அங்கமாக கருத வேண்டாமா? சர்வாதிகாரிகள், மன்னர்கள், மிராசுதாரர்கள், ஜார்கள், கொடுங்கோலர்கள், இராணுவத்தளபதிகள் போன்றோர் ஆளும் நாடுகளில் மக்களின் கருத்துக்கு வாய்ப்பளிப்பதில்லை. அவர்கள் கூற்று சல்லி காசுக்கும் பிரயோஜனமில்லை. ஆனால் ஜனநாயக நாட்டில் அவ்வாறில்லை. மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதே பிரதானம். அவர்கள் விரலில் மையிட்டு, நாட்டில் கருமை, வெம்மை கொடுமைகளை களையும் முறையே 'ஓட்டுப்பதிவு' என்னும் தலை சிறந்த முறை. யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் முறையில் நம்முடைய சொல்லுக்கும் மரியாதை தரப்படுகிறதே, அதை நாம் தவற விடலாமா?
    
  • யார் ஆண்டால் நமக்கென்ன? 
இந்த எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இது ஒரு சலிப்புத்தனத்தின் வெளிப்பாடேதவிர, இதில் சிறிதளவும் நியாயம் இல்லை. இவர்கள் எதையோ அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அதை நிறைவேற்ற ஆட்சியாளர்களால் இயலவில்லை. அடுத்து வருபவராவது அவ்வாறு செய்வாரா என்றால் அவரும் அப்படி செய்யாமல் இருக்கிறார். இந்த நிலை தொடரும்போது, சலிப்புத்தன்மை ஏற்படுகிறது. இந்த சலிப்புத்தன்மை தோன்ற நாம் அனுமதிக்கலாகாது. எல்லாரும் ஒரே மாதிரி ஆள்வதில்லை. இராமனுடைய ஆட்சிக்கும் இராவணனின் ஆட்சிக்கும் வேறுபாடு உண்டு. இந்திரா காந்தியின் ஆட்சி அதற்கு முந்தைய ஆட்சிகளிலிருந்து வேறுபட்டது. மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை, நாட்டின் பாதுகாப்பு என்று அவருடைய பாணியே வித்தியாசமாக இருந்தது. புதிய பொருளாதார கொள்கையை நடைமுறை படுத்தி நரசிம்ம ராவ் மாற்றத்தை ஏற்படுத்தினார். புதிய தொழில் நுட்பத்தையும், கணினி மயத்தையும் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினார். அத்தகைய திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள் வேறு. ஆனால் யார் ஆண்டால் என்ன எனும் கேள்விக்கு இவை பதில் அளிக்கின்றன. இந்த மாற்றங்களை நாம் காணவேண்டும் என்றால் இப்படி கேள்விகள் கேட்பதை விடுத்து ஓட்டுப்போடவேண்டும்.

  • நிற்கிறவர்களில் யாரும் நல்லவர்கள் அல்ல!
பலபேர் கூறும் காரணம் இதுதான். தேர்தலில் போட்டியிடுவோரில் எல்லோரும் தீயவர்களே. ஆகவே நான் யாருக்கும் ஓட்டுப்போடப் போவதில்லை, என்று தாங்கள் ஏதோ அரிச்சந்திரனின் வாரிசு என்கிற பாணியில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வசம் இருக்கும் அத்தனை அயோக்கியத்தனத்தையும் மறைக்கப்பார்ப்பார்கள். எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடும் அத்தனைப்பேருமே அயோக்கியர்கள் என்று சொல்லி விட முடியாது. அப்படி ஒரு முடிவெடுக்கும் முன் நாம் அத்தனை வேட்பாளர்களின் வரலாற்றையும் அறிந்திருக்க வேண்டும். அப்படி செய்வதில்லை. அங்கே போட்டியிடும் ஓரிருவர் தவிர மற்ற அனைவரின் பெயர் கூட நமக்கு தெரிந்திருக்காது. ஆனால் நாம் எல்லாருமே திருடங்கதான் என்று முடிவு கட்டி விடுவோம். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. உண்மையில் நாட்டின் மீதும் நாட்டு மக்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கரைக்கொண்ட எண்ணற்ற வேட்பாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டியது நம்முடைய தலையாய கடைமையாகும். அதை விடுத்து அனைவருக்கும் ஒரு சேர முத்திரைக்குத்தி ஒதுக்கி விடுவது சரியான நடவடிக்கை அல்ல. 

எல்லோருடைய வரலாறும் நமக்கு நன்கு தெரிந்து அதில் யாரும் யோக்கியன் இல்லை என்று நாம் தீர்மானிக்கிறோம் என்றால் அந்த தேர்தலில் நாம் ஒரு யோக்கியனை முன்னிறுத்த நம்மாலான மூயற்சியை செய்யலாம். அப்படி ஒரு யோக்கியன் கிடைக்கவில்லை என்றால், நாமே அந்த தேர்தலில் போட்டியிடலாம், நாம் யோக்கியனாக இருக்கும் பட்சத்தில். அதற்காகத்தான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சுமார் பத்து நாட்கள் தரப்படுகிறது. அந்த சந்தர்பத்தை விட்டு விட்டு, ஓட்டுப்பதிவின் போது, யாருமே யோக்கியன் கிடைக்க வில்லை என்று புலம்புவது ஆண்மைக்கு இழுக்கு. அடுத்தவன் யோக்கியனா, அயோக்கியனா என்று சான்றிதழ் அளிக்க நமக்கு யோக்கியதையும் இல்லை, உரிமையும் இல்லை. ஆனால் போட்டியிடுவோரில் நம் பகுதி மக்கள் மீதும், பொதுவாக தேசத்தின் மீதும் பற்றுள்ளவன் யார், இருப்பவனில் மேலானவன் யார் என்று தீர்மானிக்கும் வலிமை நமக்குள்ளது. அதன் அடிப்படையில் ஓட்டு போடா முடியும். இதை கூட செய்யமுடியாது என்றால் நாம் இந்த தேசத்திற்கு பாரம் அல்லவா?

  • ஓட்டுப்போடுவதால் என்ன நன்மை?
ஓட்டுப்போடுவதால் நமக்கு பல நன்மைகள் விளைகின்றன. முதல் நன்மை நான் இந்த மண்ணின் வாக்காளன் என்கிற இறுமாப்பு. இதில் என்ன தலைக்கனம் வேண்டியிருக்கிறது? என்று கேட்பவர்கள் கவனத்திற்கு: பல நாடுகளில் இந்த வாக்குரிமை பலருக்கு கிடையாது. இனம், மொழி, மதம், என்று  பாகுபாடு செய்து இந்த வாக்குரிமை மறுக்கப்படுகிறது. நம் நாட்டிலேயே கூட சுதந்திரம் பெரும் வரை ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் இன்று நம் அனைவருக்கும் இந்த உரிமை உள்ளதே! அதில் ஒரு கர்வம் இருக்காதா? அங்கங்கே வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்கள் ஆர்பாட்டம் செய்கிறார்களே! அது ஏன்? அவர்களுக்கு அந்த வாக்குகளின் அருமை தெரிந்திருப்பதனால்தான். எனக்கு என்ன நன்மை? ஒரு சிறந்த பிரதி நிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கு கொடுக்க பட்டதே அதே சிறந்த நன்மைதானே! மந்திரக்கோல் போல் உடனடி மாற்றங்களை அது ஏற்படுத்தாவிட்டாலும், விரைவில் ஒரு நல்ல மாற்றத்திற்கு அவை அடிகோலாக அமையுமே. பகுத்தறிவுள்ள யாருமே இப்படித்தானே சிந்திப்பார்கள். இந்தியாவில் பல பகுதிகளில் குட்டி மன்னர்களைப்போல கோலோச்சியவர்கள் மண்ணைக்கவ்வி, கோர்ட்டு, சிறைச்சாலை, ஜாமீன், வாய்தா என்று அலைவதையும், அவர்களின் மக்களும், நண்பர்களும், பெட்டிப்பாம்பாய் அடங்கிக்கிடப்பதையும் நாம் பார்க்கிறோமே! இந்த நிலைமை ஏற்பட்டது எப்படி? நாம் செலுத்தும் ஒரு வாக்குதானே அந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இனி பீகாரை ஒன்றும் செய்வதற்கில்லை. அதை இலவசமாக கொடுத்தாலும் பெறுவார் இல்லை என்கிற அளவிற்கு சீர்கெட்டிருந்த சட்டம் ஒழுங்கு, நிதி-நீதி நிர்வாகத்தை இன்று எல்லோரும் கண்டு வியப்புறும் வண்ணம் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது இந்த வாக்குச்சீட்டுதானே! இன்று இந்தியாவில் அதிவிரைவாக முன்னேறும் பொருளாதாரம் பீகாருடையது. நான் இட்டதுதான் சட்டம் என்று கோலோச்சியவர்களை எல்லாம் அந்த சட்டத்தின் முன்னும், சாதாரணமக்களின் முன்னும் மண்டியிட வைத்திருக்கிறது இந்த வாக்குரிமை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகளும், அநியாயங்களும் நடைபெறலாம். அவை நாம் இன்னும் முதிர்ச்சிப்பெற வேண்டும் என்பதை காட்டுகிறதேயன்றி ஜனநாயக நடை முறைதோற்றது என்று அவை பறை சாட்டவில்லை. இன்று ஒட்டு மொத்த ஆசியாவிலேயே, ஏன் உலகின் பல முன்னணி நாடுகளும் வெற்றி பெறாத வண்ணம், நம்முடைய ஜனநாயகம் வலிமை பெற்று விளங்குவதற்கு காரணம் நம் மக்கள் ஜனநாயக மாண்புகளின் மேல் கொண்டுள்ள பற்றுதான் காரணம். அண்ணா ஹசாரே போன்ற சாதாரண மனிதர்களும், கூடங்குளம் மக்களும் இன்று அரசாங்கத்தை தங்கள் பால் ஈர்த்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின், புலமையோ, அறிவோ, ஆயுதமோ, பொருளாதாரமோ, இனமோ, மொழியோ, ஆற்றலோ காரணம் அல்ல. அவர்களிடம் உள்ள ஒரே ஒரு வாக்குச்சீட்டுத்தான். இதை நாம் எப்படி மறக்க முடியும். அத்தகைய வல்லமையை கொடுக்கும் ஓட்டுரிமையை உதாசீனப்படுத்துவது பகுத்தறிவாளர் மட்டுமல்ல, படிக்காத முட்டாளும் செய்யத்துணியாத செயலாகும்.  
  • நான் ஓட்டுப்போடாமல் இருப்பதால் என்ன போயிடப்போகுது?
இந்த குணம் பெரும்பாலும் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்களிடம்தான் உள்ளது. பாமர மக்கள் காலையிலேயே வாக்கு சாவடிகள் முன்பு அணிவகுக்கிறார்கள். எதற்கும் அடுத்தவரை குறை கூறுபவர்கள், தங்கள் தகுதிக்கும் மீறி ஆசைபடுபவர்கள், அடுத்தவர்களை படிக்காதவன், வசதியற்றவன் என்றுமட்டுமல்லாமல் அவர்களின் நடை உடை பாவனை போன்றவற்றை வைத்து குறை கூறுபவர்கள், தாங்கள் வாழ்வின் மேல்தட்டு மக்கள் என்று நினைத்துக்கொள்பவர்கள், அரசின் பலனை தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், அரசின் பலன் கிடைக்காத பொழுது அதை அடைய தாங்கள் சார்ந்துள்ள அரசு இயந்திரத்தை தவறாக பயன் படுத்துபவர்கள் என்று ஒரு நீண்ட சோம்பேறிகளின் கூட்டம் மட்டுமே இப்படி சிந்திக்கிறது. கால் ஊனமுற்றவர்கள், கண்பார்வை இல்லாதவர்கள், நடக்க இயலாத தள்ளமையுற்ற முதியவர்கள் என்று வாழ்வின் பல இன்னல்களை சந்திப்பவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள். அவர்களின் புகைப்படத்தை போட்டு பத்திரிக்கைகள், தொலைக்கட்சிகள் செய்தி வெளியிடுகின்றன. இதை கண்டும் கூட சில சோம்பேறிகள் தங்களை மட்டுமே அதி மேதாவிகள் என்று நினைத்து கொண்டு வாக்களிக்காமல் இருந்து விடுகிறார்கள். 

இத்தகைய, தேசத்தை பிடித்த ஒட்டுண்ணிகள், வாக்களிக்க ஏதுவாய் அரசு தரும் விடுமுறையை கூட தங்கள் சுய நலனுக்குமட்டுமே பயன் படுத்துகிறார்கள். அன்றாட கூலி வேலை செய்பவர்கள் கூட வாக்களித்த பின்னரே பணிக்கு செல்கிறார்கள். ஆனால் வாக்களிக்க மட்டுமே என்று அரசு விடுமுறையை பெற்றவர்கள் அதை பயன் படுத்துவதில்லை. தொலைகாட்சி, சினிமா, கேளிக்கை என்று காலத்தை கழிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த நாட்டின் மீதும், மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் உள்ள அக்கறை அவ்வளவுதான். 

சரி! ஓட்டு போடுவதால் என்ன நன்மை என்பதை பார்ப்போம். முதல் நன்மை சரியான ஆள்தான் ஒட்டுப்போட்டார் என்பது உறுதி. அடுத்து, தவறான ஆள் ஓட்டு போடமாட்டார் என்பது உறுதி. பிறகு, நம்முடைய கணிப்பில், சரியான ஆளுக்குத்தான் போட்டோம் என்பது உறுதி. அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்க நம்மாலான கடமையை செய்தோம் என்பது உறுதி. அந்நியர்கள் நம்மை பார்த்து  மேலும் வியக்கும் வண்ணம் நம்முடைய ஜனநாயக இழையை (Democratic Fabric) வலிமைப்படுத்தினோம் என்பது உறுதி. நாம் வாக்களித்தவர்கள் முறையாக செயல் படவில்லை என்பதால் அவரை மாற்றவோ, நீக்கவோ, நாம் இங்கே வாக்களிக்கிறோம் என்பது உறுதி. இப்பொழுது வாக்கைபெருபவருக்கும் அத்தகைய ஒரு பயம் ஏற்படும் என்பதும் உறுதி. இப்படி நீண்ட உறுதியான நன்மைகள் உள்ள நிலையில் நாம் எப்படி வாக்களிக்காமல் இருக்கலாம்? பாமரத்தனமாக சொல்வதென்றால், ஒட்டுபோட்டதனே நம்ம ஊருக்கு ரோடுபோடுவாங்க, பஸ்சுவிடுவாங்க, குழாய் போடுவாங்க, பள்ளிக்கூடம் கட்டித்தருவாங்க, இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும்! இது நன்மைதானே!

ஆகவே நண்பர்களே நம் தனிச்சிறப்பான ஜனநாயகம் காக்கப்பட, நாம் அனைவரும் நூறு சதவீதம், வாக்களித்து சிறப்பான ஆட்சியாளர்களை உருவாக்குவோம். இனி வருங்காலங்களில் ஜனநாயகத்தில் உள்ள குறைகளை களைந்து உலகின் தன்னிகரில்லா ஜனநாயகம் நமது என்று புகழும் வண்ணம் தலை நிமிர்ந்து செயல் படுவோம். 

நம்முடைய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திற்கு சென்று உங்கள் பெயரை வாக்களர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதோடு அவ்வப்பொழுது பட்டியலில் பெயரை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 

வாக்குரிமை தொடர்பான மேலும் ஒரு Blog ஐயும் படியுங்கள்.