நம்முடைய நாடு ஜனநாயக நாடு. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்து ஆட்சி செய்துக்கொள்ள அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. அதில் குறைகள், நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். அதை களைய வேண்டுமே ஒழிய அந்த ஜனநாயக நடைமுறையையே கேலி செய்யும் விதமாகவும் அதை குட்டிச்சுவராக்கும் விதமாகவும் 49(O) போன்ற விதிமுறைகளை உருவாக்குவது கூடாது. 49(O) என்பது மக்கள் தங்களைத்தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முற்படும் ஒரு ஜனநாயக பணியில் இடையூறு விளைவிப்பதாகவே அமையும். ஒரு குழு, கூட்டம் அல்லது அமைப்பை சிறப்பாக வழிநடத்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டியது அந்த அமைப்பை சார்ந்த அனைவரின் பொறுப்பு. அனைவருமே அந்த தலைமை பதவிக்கு போட்டியிடலாம். அனால் போட்டியிடவும் மாட்டேன். கூட்டத்தில் உள்ள மற்றவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த மாட்டேன். போட்டியிடும் ஒவ்வொருவரிடமும் உள்ள குறைகளை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டி குறை கூறி அவர்கள் யாருக்கும் வாக்களிக்ககூடாது என்று 49(O) படிவத்தில் வாக்களித்து என் எத்ரிப்பை தெரிவிப்பேன் என்பது அவர்களின் கையாலாகாத பேடித்தனத்தைதான் பறை சாற்றுகிறதே தவிர வேறொன்றுமில்லை. இப்போதைக்கு இது ஒரு பாஷனாகவும் மாறிவிட்டது. 13/04/2011 அன்று நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 25000 பேர் இத்தகைய படிவத்தில் வாக்களித்துள்ளார்கள். இவர்களை என்ன சொல்ல. பெரும்பாலும் இவர்கள் அனைவரும் படித்தவர்களாகவே இருப்பார்கள். அடுத்தவர்களை குறைகூறியே காலத்தைக்கழிப்பார்கள். பொதுநலத்தில் அக்கறை இருப்பதைப்போல காட்டிக்கொள்வார்கள், உண்மையில் சுயநலமாகவே செயல்படுவார்கள். எவனுக்கு ஓட்டு போட்டாலும் திருடத்தான் போகிறான் என்று வரட்டு வேதாந்தம் பேசுவார்கள். எச்சைக்கையால் காக்காய் கூட ஓட்ட மாட்டார்கள்.
ஜனநாயக விரோத 49(O) படிவத்தை இனிமேலாவது ஒழிக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

No comments:
Post a Comment