Tuesday, July 5, 2011

காங்கிரஸ் கையில் "தெலுங்கானா"

இன்னைக்கு இந்த நாட்ட பிடிச்சிருக்கிற பல சனியன்களுக்கு விதை போட்டது காங்கிரசும் அதன் அரசாங்கங்களும்தான். அது காஷ்மீர், பஞ்சாப், அசாம், மாவோயிஸ்ட், என்று அந்த பிரச்சனையாயிருந்தாலும் சரி அதில் காங்கிரசின் கை வண்ணம் மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு இந்த நாட்டில் பல கொடிய வன்முறைகளுக்கு வித்திட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கின்றது இந்த காங்கிரஸ். அதன் தொடர் முயற்சிகளின் மற்றொரு அம்சம்தான் தெலுங்கானா பிரச்சனை. 

நாடு சுதந்திரம் பெற்றவுடன் நிர்வாக வசதிக்காக ஐந்து பிரிவாக பிரித்து அமைக்கலாம் என்று யோசனை சொன்னார் ராஜாஜி. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களாக அவை இருக்கட்டும் என்று சொன்னார். ஆனால் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் நேரு மொழி வாரி மாநிலங்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் மக்களை பிரித்து வைத்தார். இன்று ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவரை விரோதியாக பார்க்கும் மனப்பான்மைக்கு வித்திட்ட புண்ணியவான் நேருதான். அந்த சமயத்தில்தான் தனி ஆந்திர மாநிலம் வேண்டும் என்று தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் கேட்டது அன்றைய சென்னை ராஜ்தானியிலிருந்து ஆந்திராவை பிரித்து கொடுக்கும்படி கேட்டனர். அவர்கள் கேட்ட ஆந்திராவில் தெலுங்கானா என்ற பிரவு இல்லை. ஏனெனில் தெலுங்கானா என்பது அன்றைய ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. சென்னை ராஜதானி என்பது ஒரிசா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, மலபார் மற்றும் திருவாங்கூரை தவிர்த்த கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் தெலுங்கானா இல்லவேயில்லை. ஆந்திர மாநில போராட்டக்காரர்கள் கேட்டது கடலோர ஆந்திரா மற்றும் ராயல சீமாவை உள்ளடக்கிய தனி ஆந்திர பிரதேசம் மட்டுமே. இது 1956 இல் உருவாக்கப்பட்டது. அப்போது அவர்கள் கேட்ட பகுதிகளை மட்டுமே தந்திருந்தால் இன்று இத்தகைய நிலைமை இல்லை. ஆனால் நேரு தான்தோன்றி தனமாக ஹைதராபாத் பகுதியை சார்ந்த தெலுங்கானாவையும்    அதனுடன் இணைத்து ஆந்திர பிரதேசத்தை உருவாக்கினார். அப்படி செய்யும்போதே அந்த பகுதி மக்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆனால் நேரு சொல்வதை தடுக்க யாருக்கு அந்த காலத்தில் தில் இருந்தது. அதனால் அந்த போராட்டம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. அவ்வப்பொழுது தலை தூக்கி சில சமாதானங்களில் அடங்கி வந்து கொண்டிருந்தது போராட்டம்.  

இன்றைய போராட்டம் ஏறத்தாழ முடிவுறும் நிலைக்கு வந்து கொண்டிருந்த பொழுது அதில் நீரூற்றுவதற்கு பதிலாக பெட்ரோலை ஊற்றி மீண்டும் பற்றி எரிய வைத்து விட்டது அதே காங்கிரஸ் அரசு. எங்கே போராட்டத்தினர் வெற்றி பெற்று அதன் பெருமை முழுவதும் அந்த பகுதியினருக்கு போய் விடுமோ என்று இந்த பிரச்சனையில் தலையிடாத கடலோர ஆந்திர, ராயலசீமா மக்களை தூண்டி விட்டு ஆந்திராவை பிரிக்க கூடாது என்று கோஷமிட வைத்து விட்டது காங்கிரஸ். இன்று நிலைமை சீரடைவதற்கு பதிலாக மோசமடைந்து விட்டது. தெலுங்கானா கொடுத்தாலும் வன்முறை இல்லாவிட்டாலும் வன்முறைதான் என்ற முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது காங்கிரஸ். 

தெலுங்கானா கோரிக்கை என்பது நாடு சுதந்திரம் பெற்று ஆகின்ற காலத்தை போன்றே பழமையானது. அம்மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் அவற்றை வெறுப்பேற்றி, கேவலப்படுத்தி இன்று சாந்தி சிரிக்க வைத்து விட்டார்கள். பின்னாளில் எழுப்பப்பட்ட ஹரியானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் போன்ற பல மாநில பிரிவினைகளுக்கு இதே காங்கிரஸ் வரவேற்பு கூறியது. இன்னும் புந்தேல்கந்து, விதர்பா, போன்ற புதிய மாநில கோரிக்கைகளுக்கும் வரவேற்பு சொல்லும் நிலையில்தான் உள்ளது காங்கிரஸ். ஏறத்தாழ இதே நிலையில்தான் உள்ளது பா.ஜ.க.வும். ஆனால் இவர்கள் எதற்காக தெலுங்கானாவை மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் ஆந்திரத்தின் மற்ற பகுதி மக்களை தூண்டி விட்டு செயற்கையாக போராட விட்டிருக்கிறார்கள். ஒரே மொழி பேசும் மக்களை எதிரெதிர் விரோதிகளாக ஆக்கிவிட்டிருக்கிரார்கள். இவர்கள் தொடர்ந்து ஆண்டு இந்த தேசத்திற்கு இன்னும் என்னெவெல்லாம் நன்மைகள்(?) செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. 

இதனிடையே தெலுங்கானா கோரிக்கை பற்றிய ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த குழுவின் தலைவர் மிக சிறந்த மனிதர் என்றாலும் எல்லாராலும் புறக்கணிக்கத்தக்க ஒரு அறிக்கையை சமர்பித்தார். பெண்ணுக்கு யாரை திருமணம் செய்விக்கலாம் என்று ஒரு யோசனை கேட்ட தகப்பனாருக்கு, அவளை சந்நியாசிநியாக்கலாம், பாழுங்கிணற்றில் தள்ளலாம் அல்லது வேசியாக்கலாம் என்று யோசனை தந்தானாம் ஒருவன்.  அப்படிதான் உள்ளது இந்த குழு பரிந்துரைத்த தீர்வு. நகரும் ஒவ்வொரு நாளும் ஆந்திரத்தில் மட்டுமில்லை ஒட்டுமொத்த தென்னகத்திற்கே பெரிய சவாலாக அமைய இருக்கிறது. காங்கிரஸ் அரசு தன்னுடைய அரசியல் சித்து விளையாட்டுக்களை மூட்டைக்கட்டி வைத்து விட்டு ஒட்டு மொத்த ஆந்திர மற்றும் இந்திய மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை. இதை சிதம்பரம் போன்ற போலி அறிவு ஜீவிகள் ஏனோதானோ என்று சிறுபிள்ளைத்தனமாக கையாளுவதைப்பார்த்தால் நம் நாட்டின் எதிர்க்காலம் பாதுகாப்பில்லாமல்தான் இருக்கிறது என்பது தெளிவாகும். 

நம்மைப்பொருத்தவரையில், தனி தெலுங்கானா மாநிலம் வழங்கப்பட வேண்டிய ஒன்று. இதில் மற்றைய ஆந்திர மக்களின் கருத்துக்கு எந்த மதிப்பும் வழங்கப்படக்கூடாது. அவர்களின் எதிர்ப்பு செயற்கையானது மற்றும் சமீபத்தியது மட்டுமே. அவர்கள் விரும்பினால் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா இனைந்து ஆந்திரம் என்று அழைக்கலாம் அதற்கு விஜயவாடா அல்லது விசாகபட்டினம் போன்ற ஒரு சிறந்த நகரை தலைநகராக்கலாம். அவர்கள் தலைநகரை நிர்மாணிக்க ஒரு சிறப்பு பொருளாதார ஏற்பாட்டை மத்திய அரசு செய்யலாம். அவர்கள் அப்படி விரும்பவில்லை என்றால் அவர்களையும் பிரித்து விடலாம் என்பதே சிறந்த தீர்வு. பிரிய முடிவெடுத்து விட்டவர்களை இனியும் ஒன்றாகக முயற்சிப்பது உடைந்த பானையை ஓட்ட வைப்பது போல் வீணான முயற்சித்தான்.   

Sunday, July 3, 2011

"ஊழலுக்கு உறுதியளிக்கிறேன்"

நம் நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. என்றாலும், நாம் உலகின் ஊழல் பட்டியலில் நான்காமிடத்தில்தான் இருக்கிறோம். நமக்கும் மேலே மூன்று பக்காத்திருடர்கள் இருப்பது நமக்கு ஆறுதல்தான். ஊழலை ஒழிக்க நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் எவ்வளவோ போராடி பார்த்தார்கள். இப்போது கூட அது பரபரப்பான விஷயமாகி வருகிறது. இதில் தமாஷ் என்னெவென்றால் ஊழல் பேர்வழிகளும் இந்த சங்கமத்தில் சேர்ந்து தாங்களும் ஊழலை ஒழிக்கப்போவதாக பேசுவதுதான். பேருந்தில் பிக் பாக்கெட் அடித்தவன் தானும் சேர்ந்து "திருடன்-திருடன்" என்று கூவுவதை போன்றதுதான் இவர்களின் கூச்சலும். ஊழலை இவர்களால் ஒழிக்க முடியாது. பாவம் அப்பாவிகள்தான் ஒழித்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள். 

சரி. ஊழல் இந்த அளவிற்கு பரவி வியாபித்து புரையோடிபோய் இருப்பதற்கு என்ன காரணம். இதற்கு அரசியல் அமைப்பு சட்டத்திலேயே வகை செய்யப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடையாதீர்கள். இவர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளும் படிவத்தை பற்றிதான் சொன்னேன். அரசு பணிகளில் சாதாரண கடை நிலை ஊழியரிலிருந்து இந்திய குடியரசு தலைவர் பதவி வரை பதவி ஏற்கும் முன்பு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்கள். இதுதான் முதல் படி. இந்த "பதவி பிரமான" வாசகங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் வடிவமைத்து தரப்பட்டிருக்கிறது. பதவி ஏற்பவர் "கடவுள் மீது ஆணையாகவோ" அல்லது "மனசாட்சிப்படியோ" இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நடப்பதாக உறுதி அளித்துவிட்டுத்தான் பதவியில் அமர வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளோர் கடவுள் மீது (swear in the name of God) என்றும் நம்பிக்கை அற்றோர் மனசாட்சிப்படி (solemnly affirm) என்றும் கூறித்தான் பதவி ஏற்கிறார்கள். இந்த படிவத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றக்கூடாது. சமீபத்தில் கேரள அமைச்சர் ஒருவர் கடவுள் என்பதற்கு பதிலாக 'அல்லா' என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. அவ்வாறு அவர் கூறியது தவறில்லை என்று கூறி உயர் நீதி மன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இனி நம் ஊழல் விவகாரத்திற்கு வருவோம். பதவி ஏற்கிற எவரும் தாம் கூறிய உறுதி மொழிக்கு எதிராக செயல் பட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறிந்துதான் இவ்வாறு உறுதி கூறுகிறார்கள். நாம் நம்முடைய வாக்கை காப்பற்றாவிட்டாலோ அல்லது வாக்கிற்கெதிராக நடந்து கொண்டாலோ அது நாம் யார் மீது உறுதி கூறுகிறோமோ அவருக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பது இந்தியர்களாகிய நம் எல்லோருடைய நம்பிக்கை. அதன் படி இங்கே கடவுள் மீதோ அல்லது மனசாட்சி மீதோ உறுதி கூறுகிறவர் அதற்கு மாறாக நடந்துக்கொல்லும்போழுது அதன் தீங்கு கடவுள் மீதும் மனசாட்சி மீதும் தான் விழும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ஊழல் செய்யும்பொழுது அதனால் ஏற்படும் இலாபம் இவருக்கு அதன் தீய விளைவு கடவுளுக்கும் மனசாட்சிக்கும். கடவுள் ஏற்பு கொள்கை உடையவன் கூட அந்த கடவுளை கல்லாக பார்க்கும் பொழுது ஊழல் செய்கிறான். அதன் பலனை அவர் அனுபவிக்க வேண்டும் என்று விட்டு விடுகிறான். இதனால்தானோ எனவோ இந்த நாட்டில் எண்ணற்ற திருக்கோயில்கள் பலகோடி சொத்துக்கள் இருந்தும் விளக்கேரியாமல் சிதிலமடைந்து இருக்கின்றன. இவர்கள் கூறும் கடவுள் மீது ஆணைக்கு கடவுளே தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. 

கடவுள் நம்பிக்கை உள்ளாவான் அவரை நிர்வாணமாக்குகின்றான் என்றால் நம்பிக்கை அற்றவன் மனசாட்சியை கொள்ளுகின்றான். அதனால்தான் அத்தகையோர் நாவில் நரம்பின்றி பேசித்திரிகின்றனர். தம்மக்கள் நலனுக்காக தம் இனத்தையும் அடகு வைக்க முற்படுகின்றனர். மனசாட்சியை கொன்ற பிறகு இவர்களை உறுத்தக்கூடிய ஒன்று இருக்கப்போவதில்லை அல்லவா. தம் இஷ்டம் போல ஊழல் செய்து திளைக்கலாம். அரசு ஊழியன் முதல் அரசியல்வாதி வரையில் பழியை சுமப்பது கடவுளும், மனசாட்சியும்தான். இவர்கள் அனுபவிப்பதென்னவோ இலாபத்தை மட்டுமே. 

இந்த நிலையை போக்குவது எப்படி? ஒரு சின்ன முயற்சிதான். நம் நாட்டில் உள்ளவர்கள் எந்த மதத்தினராயினும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட தம் பிள்ளை பெண்டுகள் மீது சத்தியம் கூற மாட்டார்கள். அவ்வாறு தாங்கள் சத்தியம் கூறி அது பிரண்டுவிட்டால் அதன் விளைவு தம் பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள் என்று ஆத்திகர் நாத்திகர் என்று வேறுபாடில்லாமல் அனைவரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை பயன்படுத்தி நாம் ஊழலை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காலாம். அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள swear in the name of God, solemnly affirm என்ற வார்த்தைகளை முற்றிலும் களைந்து விட்டு, "SWEAR IN THE NAME OF MY SON/DAUGHTER/MYSELF" என்ற வாசகங்களை பொறிக்க செய்யலாம். தாங்கள் சத்தியம் தவறும்பொழுது தங்கள் குழந்தைகள் அனுபவிப்பார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு அரசு ஊழியன் அல்லது அரசியல் வாதிக்கும் வரும். ஊழல் செய்வது தவிர்க்கப்படும். உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்.    

Friday, July 1, 2011

"இப்பதான் தெரியுமாம்"

பா.ஜ.க.வின் திரு. ஜஸ்வந்த் சிங் யாருக்கும் தெரியாத முத்து ஒன்றை உதித்திருக்கிறார். " சக எம்.பி.க்களான திரு. இராசாவும், கனிமொழியும் சிறையில் வாடுகிறார்களாம். இது அவருக்கு வேதனையாக இருக்கிறதாம். அவர்களுக்கு பெயில் மறுக்கப்பட்டது தவறாம்" இன்னும் என்னவென்னல்லாமோ உளறியிருக்கிறார் திரு. சிங். இவர்கள் சராசரி அரசியல்வாதிகள் மட்டுமில்லை. நம் ஜனநாயகத்திற்கு வெட்டு வைக்கும் சூனியக்காரர்கள். இவர்களை எல்லாம் ஒரு மனிதர்கள் என்று எண்ணுவது நம் தவறு. இருந்தாலும் முக்கிய எதிர் கட்சி எம்.பி. சொல்லுகிறார் என்றால் கேட்கத்தானே வேண்டும். கேட்டு சும்மா இருக்க முடியுமா? இந்திய குடிமகன் என்ற வகையில் என்னுடைய உளறலுக்கும் இடம் இருக்கத்தானே செய்யும். 

முதற்கண் இந்த ஜஸ்வந்த் சிங் ஒன்றை மறந்து விட்டார். நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதி மன்றமே தீர்ப்பு சொன்னபிறகு அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. மறு ஆய்வு மனு போடலாம் அவ்வளவுதான். ஜாமீன் வழக்கில் அதற்கும் இடமில்லை. 
சரி சக எம்.பி.க்கள் என்பதால் அவர்கள் தவறு செய்கின்றபோது வேடிக்கை பார்க்க வேண்டுமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இவர்களுக்கு கிடையாதா? இது கூட இவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்கு காரணம் அரசியல் மட்டுமே. 

நாட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் வாடுவது வெறும் இராசா, கனிமொழி மட்டுமில்லை. எண்ணற்ற அப்பாவி இந்தியா குடிமக்கள் வாதாட வக்கில்லாமல் வெறும் பொய் வழக்குகளில் சிக்கி இந்தியா சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். அவர்களை ஏறெடுத்து பார்க்க கூட இந்த நாட்டில் நாதியில்லை. அதற்கு ஆதரவாக ஒருநாளும் இந்த சிங்குகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததில்லை. இப்பொழுது மட்டும் பொத்துக்கொண்டு வருகிறார். அதுவும் சிறைபட்ட சுமார் ஐந்து மாதம் கழித்து யாவருக்கு இறக்கம் வந்திருக்கிறது. இப்போது என் வந்திருக்கிறது இந்த கனிவு. 

இந்த ஜஸ்வந்த் சிங் சில நாட்களுக்கு முன்னர் செல்வி. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். என்ன பேசினார்களோ. மரியாதை நிமித்தம் என்றார்கள். பா.ஜ.க. சார்பாக தூது விட்டிருப்பார்கள். அம்மையார் பிடி கொடுத்திருக்க மாட்டார். பொருத்து பார்த்துவிட்டு இந்த கனி கசக்கும் என்ற நிலையில் இப்படி தி.மு.கவுக்கு சாதகமாக குரல் கொடுத்திருக்கிறார். இதே குரலை சில மாதங்களுக்கு முன்பு லாலுவும், சிபு சோரனும் சிறையிலிருந்த பொது விட வேண்டியதுதானே. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தி.மு.க.வை நெருங்க காவி கட்சி திட்டம் போடுகிறது. அம்மையார் ஒன்று காங்கிரசுடன் செல்வார் அல்லது தோழர்களுடன் செல்வார் என்ற நிலை தெளிவாகி வருகிறது. அதற்காக இப்போதே இருக்கட்டும் என்று உடன் பிறப்புகளுடன் கை கோர்கிரார்கள் போலிருக்கிறது. தி.மு.க.வும் சமீப காலமாக சில விஷயங்களில் காங்கிரசுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார்கள். பொது கணக்குக்குழு, லோக்பால் போன்ற அமைப்புகளில் அவர்களது செயல்பாடு பா.ஜ.க. வுக்கு இனிக்கும் விதமாக இருப்பதை கவனித்தால் இது புரியும்.