நவீன அன்னைத்தெரேசா, பதவியைத்துறந்ததாக தியாகி பட்டம் கட்டிக்கொண்டு அத்தகைய பதவிகளில் தன்னுடைய அதிகாரத்தை இயல்பாக செலுத்தும் காங்கிரசின் தலைவியான சோனியாவைப்பற்றி கேட்கவே வேண்டாம். "ஊழலுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடுவோம்" என்று அண்ணாவுக்கு வெட்கமில்லாமல் கடிதம் எழுதுகிறார். குட்ரோச்சியை தப்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தம்முடைய அடிவருடிகளின் ஆட்சியை விட்டு செய்ததே இந்த புண்ணியவதிதான். போபார்ஸ் ஊழலில் போன பணம் திரும்பி வரும் என்று எந்த இந்தியனும் கனவுகூட காண முடியாது. போதாகுறைக்கு 2G யில் இவர்களுக்கு தெரியாமல் ஊழல் நடந்திருக்க முடியாது என்று சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதி சொல்லாமல் சொன்னார் (ராசா தனியொருவராக இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது என்பது அவர் வாதம்) இத்தகைய பெருமைமிகு பெண்மணியுடன் ஒன்று சேர்ந்து ஊழலை ஒழிக்கப் புறப்படுவது கருவாட்டிற்கு பூனையை நம்பி காவல் வைப்பது போலத்தான்.
எதிர்கால நம்பிக்கை நட்ச்சத்திரம், அடுத்த பிரதமர் என்றெல்லாம் இவர்களால் வருணிக்கப்படும் இளைஞர் ராகுல் காந்தி என்ன செய்கிறார்? பிரதமர் பதவியை ஏற்கவும் முடியவில்லை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை. பதவியில் அமராமலேயே ஒரு சூப்பர் பிரதமர் போல செயல் படுகிறார் இந்த மனிதர். மாயாவதிக்கு எதிராக எப்படியெல்லாம் செயல் பட்டால் வரும் தேர்தலில் உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்குகளைப்பெறலாம் என்று செயல் படவே அவருக்கு நேரம்போதவில்லை. ஏற்கெனவே பிகார் தேர்தலில் ரத்தம் காக்க பேசியும் முன்பெல்லாமில்லாத அளவிற்கான தோல்வியை சந்தித்த காங்கிரஸ் உ.பி. யிலும் அந்த கதியை அடையவேண்டும் என்கிற அளவிற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். உ.பி. விவசாயி போராட்டங்களை முன்னின்று நடத்த முனைந்த அவர் மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டத்தை நடத்த முன்வராததற்கு காரணம் அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அது போக இப்போதைக்கு அங்கே தேர்தலுமில்லை. பின் எதற்காக போராடப்போகிறார். இப்படிப்பட்ட மனிதர் சொல்லித்தான் அண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய பிரதமர் உத்தரவிட்டாராம். இந்த காங்கிரஸ்காரர்கள் ராஹுளை புகழ்வதாக எண்ணி பிரதமரை இகழ்ந்திருக்கிறார்கள். இதுகூட புரியாத மனிதரா நம் பொருளாதார மேதை? அதுதான் காங்கிரசை உண்டு-இல்லை என்று பண்ணிக்கொண்டிருக்கிறார். நரசிம்மராவின் சீடரல்லவா? காங்கிரசை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கிறது.
லோக்பால் மட்டுமே ஊழலுக்கு தீர்வல்ல. ஆனால் அந்த முயற்சியில் ஒரு சிறு ஏற்பாடுதான் இது. இதற்கே அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்றால், ஊழலைக்களைய பொதுமக்களாகிய நாம் மிகப்பெரிய சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் அண்ணா உண்டுபண்ணிய எழுச்சித்தீபம் அணையாமல் காக்க வேண்டும். நாம் நேர்மையாக இருப்போம், நேர்மையாக செயல்படுவோம் ஒழுக்கத்தை நம் மூச்சாக கொள்வோம், நம் இளையத்தலைமுறையை அவ்வாறே வளர்ப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டாலொழிய அத்தகைய நிலையை அடைய இயலாது. அவ்வாறு செயல்படுவதொன்றும் சாதாரண காரியமல்ல. வரிசையில் (Queue) நின்று நாம் எத்தனைப்பேர் செல்ல தயாராக இருக்கிறோம். அதிலிருந்து சிலர் விலகிச்செல்லும்போது எத்தனைப்பேர் தட்டிக்கேட்கிறோம். மாறாக நாமுமல்லவா விலகிச்செல்ல முற்படுகிறோம். நாம் ஒருவர் மட்டும் திருந்தினால் போதுமா? என்று நொண்டிச்சாக்கு சொல்லுவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்கிறோமே தவிர நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட கிடையாது. இத்தகைய நேர்மைக்குறைவு நம்மிடம் இருப்பதாலேயே நாம் அடுத்தவர் செய்யும் தவற்றை தட்டிக்கேட்கும் பலமும் உரிமையும் இழந்து விடுகிறோம். அத்தகைய தன்மை வாய்ந்த நம்மிடமிருந்தே இந்த மோசமான அரசியல்வாதிகள் உண்டாகிறார்கள். ஆக ஊழலை ஒழிப்பதற்கு சட்டம் தேவையில்லை. அது போதவும் போதாது. நம்மிடம் நேர்மையை வளர்த்துக்கொண்டாலேயே ஊழல் தானாக மறைந்து விடும். இருட்டை ஒழிக்க தீபத்தைத்தவிர வேறோர் ஆயுதமிருக்க முடியுமா? உங்கள் ஆதரவை நல்கிட இந்த தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்: Fight Corruption
