
அண்ணா ஹஜாரே! இன்றைய இந்தியாவில் இந்த பெயரை தெரியாத மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ அரசியல்வாதி(வியாதி)கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆளும் வர்க்கத்தின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் இந்த முன்னாள் ராணுவ வீரர். சுதந்திர இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டிய கூட்டத்திற்கு பின்னர் ஒரு தனி மனிதனால் ஒரு மாபெரும் கூட்டத்தை கூட்ட அண்ணா அவர்களால் முடிந்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. இந்தியாவை பல பிரச்சனைகள் பிடுங்கி தின்றாலும் மக்கள் அவற்றிற்கெல்லாம் வெகுண்டெழுவது அரிதாகவே நடக்கிறது. சாதி, மத, மொழி, இன, மாநில உணர்வுகளால் மக்கள் உடனடியாக உந்தப்பட்டாலும் அலை அலையாக கூடி வந்தது கிடையாது. அத்தகைய கூட்டங்களில் ஒரு சிலர் கிளர்ச்சி என்ற பெயரிலும், பந்த், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்ற வடிவங்களிலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதே இந்த நாடு சர்வ சாதாரணமாக கண்டு வந்திருக்கும் உண்மை. அந்த வன்முறைகளில் தாங்கள் சிக்கி பலியாகி விடக்கூடாதே என்று பயந்து வீடுகளிலேயே மக்கள் தங்கி விடுவதையும் ஒரு சில சமூக விரோதிகள் ஏற்படுத்தும் நாச செயல்களையும் தங்களுக்கு கிடைத்த ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் எண்ணி விடுவதுண்டு. அதற்கு பயந்து ஆட்ச்சியாளர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுவதுமுண்டு. அத்தகைய காலகட்டத்தில்தான் அண்ணா அவர்கள் தலைமையில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர தருகிறது. அத்தகைய அளவிற்கு மக்கள் ஊழலில் அடிபட்டு கிடக்கிறார்கள். ஒரு திடீர் கூட்டத்தை (unorganized) முறையாக செயல் படும் அளவிற்கு, வன்முறையில் ஈடுபடாத அளவிற்கு, அரசாங்கத்தை பயமுறுத்தும் அளவிற்கு திரட்ட முடிகிறதென்றால் இன்னும் இந்த நாட்டில் காந்தீய நெறிமுறைகள் உயிரோடுதான் இருக்கின்றன என்பது நிருபணமாகிறது. அதுவும் மிகுந்த வலிமையுள்ளதாக இருக்கிறது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

திரு. அண்ணா அவர்களைப்பற்றி ஒரு சிலருக்குத்தான் முழுமையாக தெரியும். சாதாரண மக்களுக்கு அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர், காந்திய நெறியை பின் பற்றுபவர், ஊழலுக்கு எதிராக போராடுகிறார் என்பது மாத்திரமே தெரியும். அவரை நம்பி எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது. இங்கேதான் ஆன்மபலமும், உண்மையின் சக்தியும் நிதர்சனமாக தெரிகிறது. எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழலுக்கு எதிராக போராடுவோம் வாருங்கள் என்று அரை கூவல் விடுகிறார்கள். ஆனால் மக்கள் அவர்கள் சொல்லை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களை நம்பி தெருவில் இறங்குவதுமில்லை. சொல்லபோனால் அவற்றை ஒரு நகைச்சுவையாகவே கருதுகிறார்கள். இப்படி இருக்கையில் அண்ணா அவர்களை நம்பி ஒரு கூட்டம் வருகின்றதென்றால் அண்ணா அவர்களின் நேர்மையான செயல்பாடுகளும், வார்த்தைகளில் உள்ள நம்பிக்கையும்தான் காரணம் என்று கூறவேண்டும். இல்லையென்றால் சோனியாவோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, லாலுவோ, மாயாவதியோ, முலாயமோ, எடியூரப்பாவோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ ஊழலுக்கெதிராக அறிக்கையை விட்டவண்ணம் இருக்கிறார்கள். அவர்களை நம்பி பொது மக்கள் வருவதில்லை. அவர்களை நம்பி வருபவர்கள் அவர்களைப்போன்றே ஆதாயத்தை எதிர்பார்த்து வரும் கட்சிக்காரர்கள், ஊழல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், சாராயவியாபாரிகள் மற்றும் பிற சமூக விரோத செயலை செய்பவர்கள் மாத்திரமே. அவற்றையும் காசுகொடுத்துத்தான் அவர்களால் கூட்ட முடிகிறது. அவ்வாறில்லாமல், சாதாரண மக்கள் தாங்களாக ஒரு மனிதனை நம்பி வருகிறார்கள் என்றால் பிறர் மீது இல்லாத ஒரு நம்பிக்கை அவர்மீதும் அவர் வார்த்தைகளின் மீதும் அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுகிறார்கள், மற்றைய எல்லா களங்கங்களுக்கும் இதுதான் மூல காரணம் என்று நம்புவதாலேயே இப்படி காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அணி அணியாக கிளம்பி வருகிறார்கள். இத்தனைக்கும் அண்ணா அவர்களிடம் வசீகரமோ, வார்த்தை ஜாலங்களோ, அரசியல்வாதிகளிடம் காணப்படும் வாழ்க-ஒழிக போடும் கூட்டமோ கிடையாது.

அண்ணா என்ற வார்த்தை மிகவும் வசீகரமானது. திருவண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை அண்ணாமலை என்றுதான் அழைப்பார்கள். ஆண்ட முடியாத தீப்பிழம்பு என்பது அதன் பொருள். வயதில் மூத்த ஆண்பிள்ளையை இளையவர்கள் அண்ணா என்று அழைப்பது நம் தமிழ் மரபு. நம்மைவிட உயர்ந்தவன் என்பது இதன் பொருள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்களையும் மக்கள் அன்போடு அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். இது ஒருவரின் பெயரின் முன்பாதியை சுருக்கி கூப்பிடுவது போன்றதல்ல. அன்புக்கு பாத்திரமானவரை அழைப்பதாகும். அப்படித்தான் இன்று மீண்டும் ஒரு அண்ணா இந்திய மண்ணில் ஒரு எழுச்சித் தாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் இளைஞர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டிருப்பதுதான் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

திரு. அண்ணா அவர்கள் வைத்துள்ள கோரிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்று மிகவும் கற்றறிந்ததாக நினைப்பவர்கள் கூறுகிறார்கள். அவர் அப்படி என்ன கேட்டுவிட்டார்? ஊழல் செய்யும் அரசியல்வாதி, நீதிபதி, ஆட்சியாளர்கள் போன்றோரை விரைந்து விசாரித்து தண்டிக்க ஒரு நேர்மையான அமைப்பு வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? நந்தன் நிலக்கேணி கூட அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக, "அண்ணா அவசரப்படக்கூடாது, அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்" என்கிறார். 1969 முதல் வெளிச்சத்தை காண முடியாமல் தவிக்கும் முயற்ச்சிக்கு இன்னும் எத்தனை நாளைக்கு நேரம் கொடுக்க வேண்டும்? அண்ணா அவர்கள் எடுத்துள்ளது மிகப்பெரிய ஆயுதம். அது கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் அடிமடியில் கை வைத்துள்ளது. அதனால்தான் அண்ணா அவர்கள் முன்வைக்கும் வாதத்திற்கு பதில்வாதம் தராமல் அவர் அணியினரை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கிறார்கள். குணப்படுகொலை (Character Assassination) செய்யும் தீவிரப்பணியில் இறங்கியிருக்கிறார்கள். முதலில், முன்னாள் தேங்காய்மூடி வக்கீலும் இந்நாள் 2G ராசாவின் வக்கீலுமான கபில் சிபல் என்ற அரிச்சந்திரனை விட்டு அண்ணாத்தரப்பில் நியாயம் இல்லை, அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது, அவர்கள் கூறும் லோக்பால் அவசியமற்றது என்று காக்காய் கூச்சல் போட்டார்கள். அடுத்து, ஒண்ணாம் நம்பர் யோக்கியன் அமர்சிங்கை விட்டு சாந்தி மற்றும் பிரசாந்த் பூஷண்களுக்கு எதிராக ஒரு கள்ள C.D. யை வெளியிட்டார்கள். பிறகு, "அண்ணா அவர்கள் ஒரு ஊழல்வாதி" என்று ஊழல்திலகங்களின் மின்விசிறி மனீஷ் திவாரி அறிக்கை வெளியிட்டார். இப்போது, அருணா ராய் என்கிற பெண்மணி மூலமாக அண்ணாவின் கூட்டத்தை உடைக்கப்பார்க்கிறார்கள். அந்த அம்மையார் மூன்றாவது லோக்பாலை தயாரித்திருக்கிறார்களாம். இரண்டாவதையே ஏற்காமல் பிடிவாதம் பிடிக்கும் அரசு இவர் சொல்வதையா ஏற்கப்போகிறது. இதில் அரசின் கைப்பாவையாக இவர் செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரியவில்லையா?

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அலிபாபவுக்கெதிரான கூட்டத்தின் தலைவன், நம்முடைய நேர்மையான (?) பிரதமர், "ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பாலை உருவாக்குவோம்" என்கிறார். இதே புண்ணியவான்தான் ராசா செய்ததெல்லாம் தமக்குத்தெரியும், அவர் தம்மிடம் சொல்லிவிட்டுத்தான் செயல்பட்டார், 2G விவகாரத்தில் எல்லாம் முறையாகத்தான் நடந்திருக்கிறது" என்று ராசா கைதாகும் வரைக்கூறிக்கொண்டிருந்தார். இப்போது யோக்கியன் வேஷம்போடுகிறார். வலிமையான லோக்பாலை இவர் எப்படி கொண்டுவருவார்? இவர்கள் நிறைவேற்றத் துடிக்கும் லோக்பால் ஒரு ஜேப்படி (Pick-Pocket) திருடனைக்கூட எதுவும் செய்ய முடியாதே? எதை வைத்து இவர் இப்படியெல்லாம் பேசுகிறார்? காரணமில்லாமல் இருக்க முடியாது. நம்முடைய பிரதமர் பதவிக்கு காங்கிரசில் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் போட்டியாளர் இல்லை. அவர் தலைமைத்தாங்க இருக்கும் காங்கிரஸ் கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டால் பிறகு யார் போட்டியை ஏற்படுத்த முடியும்? சந்தோஷமாக காலத்தைக் கழிக்கலாமே! என்பது அவர் எண்ணம் போலும்.
நவீன அன்னைத்தெரேசா, பதவியைத்துறந்ததாக தியாகி பட்டம் கட்டிக்கொண்டு அத்தகைய பதவிகளில் தன்னுடைய அதிகாரத்தை இயல்பாக செலுத்தும் காங்கிரசின் தலைவியான சோனியாவைப்பற்றி கேட்கவே வேண்டாம். "ஊழலுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடுவோம்" என்று அண்ணாவுக்கு வெட்கமில்லாமல் கடிதம் எழுதுகிறார். குட்ரோச்சியை தப்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தம்முடைய அடிவருடிகளின் ஆட்சியை விட்டு செய்ததே இந்த புண்ணியவதிதான். போபார்ஸ் ஊழலில் போன பணம் திரும்பி வரும் என்று எந்த இந்தியனும் கனவுகூட காண முடியாது. போதாகுறைக்கு 2G யில் இவர்களுக்கு தெரியாமல் ஊழல் நடந்திருக்க முடியாது என்று சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதி சொல்லாமல் சொன்னார் (ராசா தனியொருவராக இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது என்பது அவர் வாதம்) இத்தகைய பெருமைமிகு பெண்மணியுடன் ஒன்று சேர்ந்து ஊழலை ஒழிக்கப் புறப்படுவது கருவாட்டிற்கு பூனையை நம்பி காவல் வைப்பது போலத்தான்.
எதிர்கால நம்பிக்கை நட்ச்சத்திரம், அடுத்த பிரதமர் என்றெல்லாம் இவர்களால் வருணிக்கப்படும் இளைஞர் ராகுல் காந்தி என்ன செய்கிறார்? பிரதமர் பதவியை ஏற்கவும் முடியவில்லை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை. பதவியில் அமராமலேயே ஒரு சூப்பர் பிரதமர் போல செயல் படுகிறார் இந்த மனிதர். மாயாவதிக்கு எதிராக எப்படியெல்லாம் செயல் பட்டால் வரும் தேர்தலில் உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்குகளைப்பெறலாம் என்று செயல் படவே அவருக்கு நேரம்போதவில்லை. ஏற்கெனவே பிகார் தேர்தலில் ரத்தம் காக்க பேசியும் முன்பெல்லாமில்லாத அளவிற்கான தோல்வியை சந்தித்த காங்கிரஸ் உ.பி. யிலும் அந்த கதியை அடையவேண்டும் என்கிற அளவிற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். உ.பி. விவசாயி போராட்டங்களை முன்னின்று நடத்த முனைந்த அவர் மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டத்தை நடத்த முன்வராததற்கு காரணம் அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அது போக இப்போதைக்கு அங்கே தேர்தலுமில்லை. பின் எதற்காக போராடப்போகிறார். இப்படிப்பட்ட மனிதர் சொல்லித்தான் அண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய பிரதமர் உத்தரவிட்டாராம். இந்த காங்கிரஸ்காரர்கள் ராஹுளை புகழ்வதாக எண்ணி பிரதமரை இகழ்ந்திருக்கிறார்கள். இதுகூட புரியாத மனிதரா நம் பொருளாதார மேதை? அதுதான் காங்கிரசை உண்டு-இல்லை என்று பண்ணிக்கொண்டிருக்கிறார். நரசிம்மராவின் சீடரல்லவா? காங்கிரசை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கிறது.

லோக்பால் மட்டுமே ஊழலுக்கு தீர்வல்ல. ஆனால் அந்த முயற்சியில் ஒரு சிறு ஏற்பாடுதான் இது. இதற்கே அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்றால், ஊழலைக்களைய பொதுமக்களாகிய நாம் மிகப்பெரிய சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் அண்ணா உண்டுபண்ணிய எழுச்சித்தீபம் அணையாமல் காக்க வேண்டும். நாம் நேர்மையாக இருப்போம், நேர்மையாக செயல்படுவோம் ஒழுக்கத்தை நம் மூச்சாக கொள்வோம், நம் இளையத்தலைமுறையை அவ்வாறே வளர்ப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டாலொழிய அத்தகைய நிலையை அடைய இயலாது. அவ்வாறு செயல்படுவதொன்றும் சாதாரண காரியமல்ல. வரிசையில் (Queue) நின்று நாம் எத்தனைப்பேர் செல்ல தயாராக இருக்கிறோம். அதிலிருந்து சிலர் விலகிச்செல்லும்போது எத்தனைப்பேர் தட்டிக்கேட்கிறோம். மாறாக நாமுமல்லவா விலகிச்செல்ல முற்படுகிறோம். நாம் ஒருவர் மட்டும் திருந்தினால் போதுமா? என்று நொண்டிச்சாக்கு சொல்லுவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்கிறோமே தவிர நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட கிடையாது. இத்தகைய நேர்மைக்குறைவு நம்மிடம் இருப்பதாலேயே நாம் அடுத்தவர் செய்யும் தவற்றை தட்டிக்கேட்கும் பலமும் உரிமையும் இழந்து விடுகிறோம். அத்தகைய தன்மை வாய்ந்த நம்மிடமிருந்தே இந்த மோசமான அரசியல்வாதிகள் உண்டாகிறார்கள். ஆக ஊழலை ஒழிப்பதற்கு சட்டம் தேவையில்லை. அது போதவும் போதாது. நம்மிடம் நேர்மையை வளர்த்துக்கொண்டாலேயே ஊழல் தானாக மறைந்து விடும். இருட்டை ஒழிக்க தீபத்தைத்தவிர வேறோர் ஆயுதமிருக்க முடியுமா? உங்கள் ஆதரவை நல்கிட இந்த தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்:
Fight Corruption
No comments:
Post a Comment