Thursday, August 11, 2011

புண்படும் தமிழ் உணர்வுகள்

தமிழ் உணர்வுகளை புண்படுத்துவதே தமது தலையாய நோக்கம் என்று மத்திய அரசு செயல் படுகிறதோ என்கிற எண்ணம் நமக்கு வளரத்தான் செய்கிறது. கருணாநிதியின் ஆதரவில் செயல் படும் அரசு அல்லவா அவ்வாறுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். 

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற குழு ஒன்று நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வந்திருந்தது. அது கண்டு ஆத்திரமடைந்த தமழக உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு சபாநாயகர் வந்திருந்த குழுவினரிடம் மன்னிப்பு கூறினாராம். இது பற்றி தமது "துக்ளக்" இதழிலும் கூட திரு. சோ அவர்கள் குறிப்பிட்டு இவ்வாறு செய்திருக்க வேண்டாம், வெளிநடப்பு செய்திருந்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிழக உறுப்பினர்கள் செய்ததில் எந்த தவறுமில்லை. சுரணை உள்ளவர்கள் செய்வதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பஞ்சாபி அல்லது வங்காளி அல்லது இந்திக்காரன் மீது அட்டூழியம் செய்த ஒரு அந்நிய நாட்டு குழுவை இப்படி அழைத்திருப்பார்களா ஆட்சியாளர்கள்? அப்படி நடந்திருந்தால் லாலுவும், முலாயம், பாதல், தாக்கரே அல்லது மம்தா போன்ற வடநாட்டு உறுப்பினர்கள் எல்லாம் மாலையிட்டு மரியாதை செய்து வந்தவனின் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்களா? அல்லது அவர்களின் செய்கைக்கு சபாநாயகர் மன்னிப்பு கேட்டிருப்பாரா? 


அடுத்ததாக நடந்தது இன்னும் கேவலம். 10/08/2011 அன்று சபை அலுவல் பட்டியலில் "இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் பற்றியும் இலங்கை அரசின் செயல்பாடுகள் பற்றியும் விவாதம்" என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. உடனடியாக ஒரு காங்கிரஸ் உறுப்பினர் சபாநாயகரிடம் ஓடி சென்று "அந்நிய நாட்டின் செயல்பாட்டை பற்றி நம் அவையில் விவாதிப்பது மரபல்ல. இது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை. அதில் நாம் தலையிட கூடாது" என்று கூறினாராம். (இப்படிப்பட்ட ஞானோதயம் காங்கிரஸ்காரனுக்கு மட்டும்தான் தோன்றும். இவர்கள் கட்சித்தலைவர்கள் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டபோது அப்படி போடாதீர்கள் நம்மூர் வங்கியிலேயே போடுங்கள் என்று சொல்லவேண்டியதுதானே?) உடனடியாக பிற்பகலில் திருத்தப்பட்ட அவை அலுவல்களை சபாநாயகர் வழங்கினாராம்.அதில் "இலங்கையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள்" என்று மட்டும் இருந்ததாம். எப்படி இருக்கிறது தமாஷ்? ஏன், கடந்த காலங்களில் இவர்கள் அந்நிய நாட்டை பற்றி சபையில் விவாதித்ததே இல்லையா? திபத்தில் சீனாவின் செயல்பாடு, கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) மேற்கு பாகிஸ்தானின் செயல்பாடு, குவைத்தில் இராக்கின் செயல்பாடு, மத்திய கிழக்கில் இஸ்ரேலின் செயல்பாடு, இன்னும் தென்னாப்பிரிக்க, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற எண்ணற்ற நாடுகளின் செயல்பாடுகளை பற்றி இவர்கள் வாய் கிழிய பேசியிருக்கிறார்களே? சமீபத்தில் கூட பர்தா விவகாரத்தில் பிரான்சை பற்றி பேசினார்கள் அல்லவா? அப்படி இருக்கும்போது இலங்கையை மட்டும் ஏன் பேசக்கூடாது? இத்தனை தலைக்குனிவும் தமிழனுக்கு மட்டும் நேர்வதேன்? அதற்கு காரணம் இருக்கிறது. சொரணை கேட்ட கருணாநிதி கும்பல் மத்திய அரசை ஆதரிக்கிறது. இனத்தை காட்டிக்கொடுத்தல், ஊரை கொள்ளை அடித்து குடும்பத்தை வளர்த்தல், தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்துதல் என்று பல இழிவான செயல்களை இந்த கும்பல் செய்து விட்டு தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட காங்கிரசின் கொத்தடிமையாக தி.மு.க. இருப்பதால்தான் ஒட்டுமொத்த தமிழினமும் இப்படி தலைகுனிய நேரிடுகிறது. இதை தலைநிமிர செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. 

No comments:

Post a Comment