Sunday, July 3, 2011

"ஊழலுக்கு உறுதியளிக்கிறேன்"

நம் நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. என்றாலும், நாம் உலகின் ஊழல் பட்டியலில் நான்காமிடத்தில்தான் இருக்கிறோம். நமக்கும் மேலே மூன்று பக்காத்திருடர்கள் இருப்பது நமக்கு ஆறுதல்தான். ஊழலை ஒழிக்க நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் எவ்வளவோ போராடி பார்த்தார்கள். இப்போது கூட அது பரபரப்பான விஷயமாகி வருகிறது. இதில் தமாஷ் என்னெவென்றால் ஊழல் பேர்வழிகளும் இந்த சங்கமத்தில் சேர்ந்து தாங்களும் ஊழலை ஒழிக்கப்போவதாக பேசுவதுதான். பேருந்தில் பிக் பாக்கெட் அடித்தவன் தானும் சேர்ந்து "திருடன்-திருடன்" என்று கூவுவதை போன்றதுதான் இவர்களின் கூச்சலும். ஊழலை இவர்களால் ஒழிக்க முடியாது. பாவம் அப்பாவிகள்தான் ஒழித்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள். 

சரி. ஊழல் இந்த அளவிற்கு பரவி வியாபித்து புரையோடிபோய் இருப்பதற்கு என்ன காரணம். இதற்கு அரசியல் அமைப்பு சட்டத்திலேயே வகை செய்யப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடையாதீர்கள். இவர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளும் படிவத்தை பற்றிதான் சொன்னேன். அரசு பணிகளில் சாதாரண கடை நிலை ஊழியரிலிருந்து இந்திய குடியரசு தலைவர் பதவி வரை பதவி ஏற்கும் முன்பு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்கள். இதுதான் முதல் படி. இந்த "பதவி பிரமான" வாசகங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் வடிவமைத்து தரப்பட்டிருக்கிறது. பதவி ஏற்பவர் "கடவுள் மீது ஆணையாகவோ" அல்லது "மனசாட்சிப்படியோ" இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நடப்பதாக உறுதி அளித்துவிட்டுத்தான் பதவியில் அமர வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளோர் கடவுள் மீது (swear in the name of God) என்றும் நம்பிக்கை அற்றோர் மனசாட்சிப்படி (solemnly affirm) என்றும் கூறித்தான் பதவி ஏற்கிறார்கள். இந்த படிவத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றக்கூடாது. சமீபத்தில் கேரள அமைச்சர் ஒருவர் கடவுள் என்பதற்கு பதிலாக 'அல்லா' என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. அவ்வாறு அவர் கூறியது தவறில்லை என்று கூறி உயர் நீதி மன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இனி நம் ஊழல் விவகாரத்திற்கு வருவோம். பதவி ஏற்கிற எவரும் தாம் கூறிய உறுதி மொழிக்கு எதிராக செயல் பட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறிந்துதான் இவ்வாறு உறுதி கூறுகிறார்கள். நாம் நம்முடைய வாக்கை காப்பற்றாவிட்டாலோ அல்லது வாக்கிற்கெதிராக நடந்து கொண்டாலோ அது நாம் யார் மீது உறுதி கூறுகிறோமோ அவருக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பது இந்தியர்களாகிய நம் எல்லோருடைய நம்பிக்கை. அதன் படி இங்கே கடவுள் மீதோ அல்லது மனசாட்சி மீதோ உறுதி கூறுகிறவர் அதற்கு மாறாக நடந்துக்கொல்லும்போழுது அதன் தீங்கு கடவுள் மீதும் மனசாட்சி மீதும் தான் விழும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ஊழல் செய்யும்பொழுது அதனால் ஏற்படும் இலாபம் இவருக்கு அதன் தீய விளைவு கடவுளுக்கும் மனசாட்சிக்கும். கடவுள் ஏற்பு கொள்கை உடையவன் கூட அந்த கடவுளை கல்லாக பார்க்கும் பொழுது ஊழல் செய்கிறான். அதன் பலனை அவர் அனுபவிக்க வேண்டும் என்று விட்டு விடுகிறான். இதனால்தானோ எனவோ இந்த நாட்டில் எண்ணற்ற திருக்கோயில்கள் பலகோடி சொத்துக்கள் இருந்தும் விளக்கேரியாமல் சிதிலமடைந்து இருக்கின்றன. இவர்கள் கூறும் கடவுள் மீது ஆணைக்கு கடவுளே தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. 

கடவுள் நம்பிக்கை உள்ளாவான் அவரை நிர்வாணமாக்குகின்றான் என்றால் நம்பிக்கை அற்றவன் மனசாட்சியை கொள்ளுகின்றான். அதனால்தான் அத்தகையோர் நாவில் நரம்பின்றி பேசித்திரிகின்றனர். தம்மக்கள் நலனுக்காக தம் இனத்தையும் அடகு வைக்க முற்படுகின்றனர். மனசாட்சியை கொன்ற பிறகு இவர்களை உறுத்தக்கூடிய ஒன்று இருக்கப்போவதில்லை அல்லவா. தம் இஷ்டம் போல ஊழல் செய்து திளைக்கலாம். அரசு ஊழியன் முதல் அரசியல்வாதி வரையில் பழியை சுமப்பது கடவுளும், மனசாட்சியும்தான். இவர்கள் அனுபவிப்பதென்னவோ இலாபத்தை மட்டுமே. 

இந்த நிலையை போக்குவது எப்படி? ஒரு சின்ன முயற்சிதான். நம் நாட்டில் உள்ளவர்கள் எந்த மதத்தினராயினும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட தம் பிள்ளை பெண்டுகள் மீது சத்தியம் கூற மாட்டார்கள். அவ்வாறு தாங்கள் சத்தியம் கூறி அது பிரண்டுவிட்டால் அதன் விளைவு தம் பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள் என்று ஆத்திகர் நாத்திகர் என்று வேறுபாடில்லாமல் அனைவரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை பயன்படுத்தி நாம் ஊழலை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காலாம். அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள swear in the name of God, solemnly affirm என்ற வார்த்தைகளை முற்றிலும் களைந்து விட்டு, "SWEAR IN THE NAME OF MY SON/DAUGHTER/MYSELF" என்ற வாசகங்களை பொறிக்க செய்யலாம். தாங்கள் சத்தியம் தவறும்பொழுது தங்கள் குழந்தைகள் அனுபவிப்பார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு அரசு ஊழியன் அல்லது அரசியல் வாதிக்கும் வரும். ஊழல் செய்வது தவிர்க்கப்படும். உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்.    

No comments:

Post a Comment