Tuesday, July 5, 2011

காங்கிரஸ் கையில் "தெலுங்கானா"

இன்னைக்கு இந்த நாட்ட பிடிச்சிருக்கிற பல சனியன்களுக்கு விதை போட்டது காங்கிரசும் அதன் அரசாங்கங்களும்தான். அது காஷ்மீர், பஞ்சாப், அசாம், மாவோயிஸ்ட், என்று அந்த பிரச்சனையாயிருந்தாலும் சரி அதில் காங்கிரசின் கை வண்ணம் மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு இந்த நாட்டில் பல கொடிய வன்முறைகளுக்கு வித்திட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கின்றது இந்த காங்கிரஸ். அதன் தொடர் முயற்சிகளின் மற்றொரு அம்சம்தான் தெலுங்கானா பிரச்சனை. 

நாடு சுதந்திரம் பெற்றவுடன் நிர்வாக வசதிக்காக ஐந்து பிரிவாக பிரித்து அமைக்கலாம் என்று யோசனை சொன்னார் ராஜாஜி. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களாக அவை இருக்கட்டும் என்று சொன்னார். ஆனால் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் நேரு மொழி வாரி மாநிலங்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் மக்களை பிரித்து வைத்தார். இன்று ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவரை விரோதியாக பார்க்கும் மனப்பான்மைக்கு வித்திட்ட புண்ணியவான் நேருதான். அந்த சமயத்தில்தான் தனி ஆந்திர மாநிலம் வேண்டும் என்று தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் கேட்டது அன்றைய சென்னை ராஜ்தானியிலிருந்து ஆந்திராவை பிரித்து கொடுக்கும்படி கேட்டனர். அவர்கள் கேட்ட ஆந்திராவில் தெலுங்கானா என்ற பிரவு இல்லை. ஏனெனில் தெலுங்கானா என்பது அன்றைய ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. சென்னை ராஜதானி என்பது ஒரிசா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, மலபார் மற்றும் திருவாங்கூரை தவிர்த்த கேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் தெலுங்கானா இல்லவேயில்லை. ஆந்திர மாநில போராட்டக்காரர்கள் கேட்டது கடலோர ஆந்திரா மற்றும் ராயல சீமாவை உள்ளடக்கிய தனி ஆந்திர பிரதேசம் மட்டுமே. இது 1956 இல் உருவாக்கப்பட்டது. அப்போது அவர்கள் கேட்ட பகுதிகளை மட்டுமே தந்திருந்தால் இன்று இத்தகைய நிலைமை இல்லை. ஆனால் நேரு தான்தோன்றி தனமாக ஹைதராபாத் பகுதியை சார்ந்த தெலுங்கானாவையும்    அதனுடன் இணைத்து ஆந்திர பிரதேசத்தை உருவாக்கினார். அப்படி செய்யும்போதே அந்த பகுதி மக்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆனால் நேரு சொல்வதை தடுக்க யாருக்கு அந்த காலத்தில் தில் இருந்தது. அதனால் அந்த போராட்டம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. அவ்வப்பொழுது தலை தூக்கி சில சமாதானங்களில் அடங்கி வந்து கொண்டிருந்தது போராட்டம்.  

இன்றைய போராட்டம் ஏறத்தாழ முடிவுறும் நிலைக்கு வந்து கொண்டிருந்த பொழுது அதில் நீரூற்றுவதற்கு பதிலாக பெட்ரோலை ஊற்றி மீண்டும் பற்றி எரிய வைத்து விட்டது அதே காங்கிரஸ் அரசு. எங்கே போராட்டத்தினர் வெற்றி பெற்று அதன் பெருமை முழுவதும் அந்த பகுதியினருக்கு போய் விடுமோ என்று இந்த பிரச்சனையில் தலையிடாத கடலோர ஆந்திர, ராயலசீமா மக்களை தூண்டி விட்டு ஆந்திராவை பிரிக்க கூடாது என்று கோஷமிட வைத்து விட்டது காங்கிரஸ். இன்று நிலைமை சீரடைவதற்கு பதிலாக மோசமடைந்து விட்டது. தெலுங்கானா கொடுத்தாலும் வன்முறை இல்லாவிட்டாலும் வன்முறைதான் என்ற முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது காங்கிரஸ். 

தெலுங்கானா கோரிக்கை என்பது நாடு சுதந்திரம் பெற்று ஆகின்ற காலத்தை போன்றே பழமையானது. அம்மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் அவற்றை வெறுப்பேற்றி, கேவலப்படுத்தி இன்று சாந்தி சிரிக்க வைத்து விட்டார்கள். பின்னாளில் எழுப்பப்பட்ட ஹரியானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் போன்ற பல மாநில பிரிவினைகளுக்கு இதே காங்கிரஸ் வரவேற்பு கூறியது. இன்னும் புந்தேல்கந்து, விதர்பா, போன்ற புதிய மாநில கோரிக்கைகளுக்கும் வரவேற்பு சொல்லும் நிலையில்தான் உள்ளது காங்கிரஸ். ஏறத்தாழ இதே நிலையில்தான் உள்ளது பா.ஜ.க.வும். ஆனால் இவர்கள் எதற்காக தெலுங்கானாவை மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் ஆந்திரத்தின் மற்ற பகுதி மக்களை தூண்டி விட்டு செயற்கையாக போராட விட்டிருக்கிறார்கள். ஒரே மொழி பேசும் மக்களை எதிரெதிர் விரோதிகளாக ஆக்கிவிட்டிருக்கிரார்கள். இவர்கள் தொடர்ந்து ஆண்டு இந்த தேசத்திற்கு இன்னும் என்னெவெல்லாம் நன்மைகள்(?) செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. 

இதனிடையே தெலுங்கானா கோரிக்கை பற்றிய ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த குழுவின் தலைவர் மிக சிறந்த மனிதர் என்றாலும் எல்லாராலும் புறக்கணிக்கத்தக்க ஒரு அறிக்கையை சமர்பித்தார். பெண்ணுக்கு யாரை திருமணம் செய்விக்கலாம் என்று ஒரு யோசனை கேட்ட தகப்பனாருக்கு, அவளை சந்நியாசிநியாக்கலாம், பாழுங்கிணற்றில் தள்ளலாம் அல்லது வேசியாக்கலாம் என்று யோசனை தந்தானாம் ஒருவன்.  அப்படிதான் உள்ளது இந்த குழு பரிந்துரைத்த தீர்வு. நகரும் ஒவ்வொரு நாளும் ஆந்திரத்தில் மட்டுமில்லை ஒட்டுமொத்த தென்னகத்திற்கே பெரிய சவாலாக அமைய இருக்கிறது. காங்கிரஸ் அரசு தன்னுடைய அரசியல் சித்து விளையாட்டுக்களை மூட்டைக்கட்டி வைத்து விட்டு ஒட்டு மொத்த ஆந்திர மற்றும் இந்திய மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை. இதை சிதம்பரம் போன்ற போலி அறிவு ஜீவிகள் ஏனோதானோ என்று சிறுபிள்ளைத்தனமாக கையாளுவதைப்பார்த்தால் நம் நாட்டின் எதிர்க்காலம் பாதுகாப்பில்லாமல்தான் இருக்கிறது என்பது தெளிவாகும். 

நம்மைப்பொருத்தவரையில், தனி தெலுங்கானா மாநிலம் வழங்கப்பட வேண்டிய ஒன்று. இதில் மற்றைய ஆந்திர மக்களின் கருத்துக்கு எந்த மதிப்பும் வழங்கப்படக்கூடாது. அவர்களின் எதிர்ப்பு செயற்கையானது மற்றும் சமீபத்தியது மட்டுமே. அவர்கள் விரும்பினால் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா இனைந்து ஆந்திரம் என்று அழைக்கலாம் அதற்கு விஜயவாடா அல்லது விசாகபட்டினம் போன்ற ஒரு சிறந்த நகரை தலைநகராக்கலாம். அவர்கள் தலைநகரை நிர்மாணிக்க ஒரு சிறப்பு பொருளாதார ஏற்பாட்டை மத்திய அரசு செய்யலாம். அவர்கள் அப்படி விரும்பவில்லை என்றால் அவர்களையும் பிரித்து விடலாம் என்பதே சிறந்த தீர்வு. பிரிய முடிவெடுத்து விட்டவர்களை இனியும் ஒன்றாகக முயற்சிப்பது உடைந்த பானையை ஓட்ட வைப்பது போல் வீணான முயற்சித்தான்.   

No comments:

Post a Comment