Friday, December 30, 2011

ஜெயலலிதாவின் தவறு-தமிழகத்தின் இழப்பு.

எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இது அவ்வப்போது நிகழ்வதுதான். கட்சியின் தலைமை சிலரை வெளியேற்றுவதும் சிலரை அனுமதிப்பதும் இயல்புதான். அவை அந்த சம்பந்தப்பட்ட கட்சி தொண்டர்களிடையில் மட்டும் பேசப்படும் நிகழ்வாக இருந்துவிடும். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து சசிகலா மற்றும் சிலர் வெளியேற்றப்பட்ட செய்தி கட்சிகளுக்கப்பால் பலரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்கள் என்றால், கட்சி சாராத நடுநிலையான பொது மக்கள் சமீபத்திய விலை மற்றும் கட்டண உயர்வுகளையும் பின்னுக்கு தள்ளி இதை விவாதித்தார்கள். அந்த அளவிற்கு அந்த ஒரு கும்பலின் வெளியேற்றம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. எதிர்கட்சியினரிடையே கூட இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது. அ.தி.மு.க. எதிர்ப்பு கருத்தை கொண்ட பத்திரிக்கைகள் கூட இந்த முடிவை வரவேற்றிருக்கின்றன. 

இதற்கு காரணம் என்ன? ஜெயலலிதா என்ற தனிநபரை மக்களுக்கு பிடித்திருக்கிறது. அவர் அப்பழுக்கற்றவர் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள், தேசிய மற்றும் தமிழ் பற்று கொண்ட அவர் சிந்தனைகளை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இலங்கை, காவிரி, முல்லை பெரியாறு போன்ற தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் அவரின் நிலைப்பாட்டை மக்கள் வரவேற்கிறார்கள். அவர் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழ்-தமிழ் என்று உதட்டளவில் பேசி ஊழலை வளர்த்து தமிழினத்தை காட்டி கொடுக்கும் கும்பல் போன்று அவர் துரோகம் இழைக்க மாட்டார் என்று மக்களுக்கு அவர் மீது அதீத நம்பிக்கை உள்ளது. தமிழர் நலன், எதிர்கால தமிழகத்தின் நன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே அவர் சில தவிர்க்க முடியாத கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். துணிச்சலான, மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதில் ஜெயலலிதாவிற்கு இணை இல்லை என்று மக்கள் கருதுகிறார்கள். இவ்வளவு நம்பிக்கைகளுக்கு பிறகும் மக்கள் அவரை இரண்டு முறை சட்ட மன்ற தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதற்கு காரணம், அவரை சுற்றி கருநாகம் போல் இறுக்கி கொடிருந்த சதி கார கும்பல்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த கும்பல் மட்டும் இல்லாவிடில் ஜெயலலிதாவை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது, இனி அவர்தான் நிரந்தர முதல்வர் என்றெல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வது நம் காதுகளில் விழுகிறது.   

ஊழல் செய்து பயன்பெறுவது ஜெயலலிதாவாக இருந்தாலும் பரவாயில்லை, இந்த சதிகார கும்பல் அல்லவோ அறுவடை செய்கிறது? ஆனால் இறுதியில் கெட்டப்பெயரை சம்பாதித்து தேர்தலில் தோல்வியை தழுவுவது ஜெயலலிதாவும் அவரது கோடானுகோடி தொண்டர்களும் தானே! பயன் ஒருபக்கம், பழி ஒருபக்கம் என்பது நியாயம் இல்லை. என்று மக்கள் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். கருணாநிதிக்காவது குடும்பம் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்ன இருக்கிறது என்று இவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்று மக்கள் அவ்வப்போது அரற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதாவை சுற்றி இருந்த சதிகார கும்பலின் அட்டகாசம் ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதியின் பாவத்தையும் போக்கும் வண்ணம் அமைந்து விட்டது. அவர் செய்த ஊழல்களையும் மீறி மக்கள் அவருக்கு வாக்களிக்க வைத்தது இந்த கும்பலின் அராஜகம்தான். இத்தகைய சதியினை புரிந்துக்கொள்ளாமல் இருந்ததே ஜெயலலிதா போன்ற அறிவுசார்ந்த, தைரியமான, தீர்க்கமாக யோசிக்கும் ஒரு பெண்மணிக்கு இழுக்காகும். இந்த கும்பலை பற்றி அவ்வப்போது அ.தி.மு.க.விழும் சரி, அரசு நிர்வாகதிலிருந்தும் சரி சிலர் எச்சரிக்கை மணியை எழுப்பி கொண்டே இருந்தார்கள். அது ஜெயலலிதாவின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை. தனது அண்ணன் மற்றும் அவர் மகள் போன்றோரின் உறவுகளையும் துறக்கும் அளவிற்கு இந்த கும்பல் ஒரு ஆட்டம் போட அவர் அனுமதித்தது எந்த ஒரு சான்றோரும் மன்னிக்க முடியாத செயல். என்னதான் உயிர் தோழி என்றாலும் அவரும் அவர் கும்பலும் தன்னுடைய சிந்தனையையே சீரழிக்கும் அளவிற்கு இடம் கொடுப்பது நாம் மன்னர் காலத்தில் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத ஒன்று. உடன் பிறவா சகோதரி என்றும், அவர் உறவினரை தத்து எடுப்பதும் எந்த வகையிலும் நியாயம் இல்லை. அந்த திருமணத்தின் போதுதான் தமிழக மக்களுக்கு பெரும் கசப்புணர்வு ஏற்பட்டது. இந்த கும்பல் ஆட்சி மற்றும் கட்சி மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று நலம் விரும்பிகள், ஆரசியல் பார்வையாளர்கள், தொண்டர்கள், ஆட்சியாளர்கள், அலுவலர்கள் போன்ற எண்ணற்றோர் எடுத்து கூறியும் அவற்றை சட்டை செய்யாத ஜெயலலிதா இத்தனை ஆண்டுகள் தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரும் தீங்கை இழைத்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த கும்பல் மீது முதன் முதலில் குற்ற பத்திரிகை வாசித்தவர் அன்றைய உணவு அமைச்சராக இருந்த இன்றைய வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர், திரு. ஜி. விஸ்வநாதன்தான். அதை சீரிய முறையில் விசாரிக்காத ஜெயலலிதா அவரை ஆட்சி மற்றும் கட்சியிலிருந்தும் நீக்கினார். அதன் பலன் தமிழகம் ஒரு சிறந்த நிர்வாகியை இழந்தது. தன்னை சுற்றி துதி பாடிகளின் கூட்டம், முட்டாள்களின் சங்கம் என்று வைத்து கொண்டு மயக்கத்தில் இருந்தார். திரு.சோ ராமஸ்வாமி போன்ற திறமையான அறிவு ஜீவிகளை கூட கருணாநிதி போன்ற ஊழல் பேர்வழியை முதலமைச்சராக முன்னிறுத்த தூண்டியது. ஜெயலலிதா இந்த கும்பலுக்கு இடம் அளித்திராவிடில் தமிழகத்தில் கீழ்கண்ட நன்மைகள் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம்.
  1. கருணாநிதி தமிழகத்தில் 1996 மற்றும் 2006 களில் முதல்வராக வந்திருக்க முடியாது. இவர் தயவில் எந்த ஒரு மத்திய அரசும் ஏற்பட்டிருக்காது. 
  2. இவர் தயவில்லாத மத்திய அரசு தொலை தொடர்பு ஊழல் போன்ற பெரும் ஊழல்களை சந்தித்திருக்காது.
  3. பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை தள்ளிய கருணாநிதி முதல்வராக இல்லை என்றால் எந்த ஒரு தமிழக மீனவனையும் இலங்கை படை கொன்றிருக்காது.
  4. தமிழனுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று கூறிக்கொண்டே தமிழன் முதிகில் கருணாநிதி குத்தி இருக்க முடியாது. விடுதலை புலிகள் என்ற இயக்கம் இலங்கையில் முடிவுக்கு வந்திருக்காது. அங்கே எண்ணற்ற தமிழரால் வீடிழந்து அகதிகள் முகாமில் சிறைக்கைதிகள் போல் அவலப்படும் நிலை வந்திருக்காது.
  5. காவிரி நடுவர் நீதி மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கும். கருணாநிதி போன்ற ஒரு சுயநல முதல்வர் இங்கே இல்லை என்ற ஒரே காரணத்திற்காகவாவது கர்நாடக அரசு நமக்குரிய நீர் பங்கை தந்திருக்கும்.
  6. முல்லைப்பெரியாறு பிரச்சனையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி கேரள சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி இருக்க மாட்டார்கள். புதிய அணை கட்டும் யோசனையே அவர்களுக்கு வந்திருக்காது. கருணாநிதி போல் அல்லாமல் ஜெயலலிதா எதுவும் செய்வார் என்கிற பயம் அவர்களுக்கு வந்திருக்கும். அத்தகைய புதிய அணைக்கட்டும் கேரள அரசின் கோரிக்கைக்கு எந்த ஒரு மத்திய அரசும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி இருக்காது.
  7. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முன் வந்திருக்காது.
  8. தனது குடும்ப உறுப்பினர்களின் நன்மை ஒன்றையே கருதி வாழ்ந்த கருணாநிதி சென்னையை சுற்றி மட்டுமே தொழிற்சாலைகளும், கட்டிடங்களும், மேம்பாலங்களும் ஏற்படுத்தி மற்றைய தமிழக பகுதிகளை புறக்கணித்திருக்க முடியாது.
மேற்கண்ட தீமைகள் தமிழகத்தில் படர ஜெயலலிதா மட்டுமே காரணம். அவர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை இதுகாறும் கண்டு கொள்ளாமல் இருந்ததே தவறு. 1991 இல் திரு விஸ்வநாதன் எழுப்பிய அபாய ஒலி இன்றுதான் ஜெயலலிதா காதுகளில் விழுந்திருக்கிறது. தமிழகம் ஒரு இருபது வருட வளர்ச்சியை இழந்திருந்தாலும், இனிமேலும் அத்தகைய இழப்பு தவிர்க்க பட்டிருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வோம். இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். 

No comments:

Post a Comment