Tuesday, May 24, 2011

நாக்-அவுட்

இராமநாதபுர மாவட்டத்தை சார்ந்த சரிதா என்கிற பெண்மணி கடந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தனது நாவை அறுத்து காணிக்கை செலுத்துவதாக (இது போன்ற உணர்ச்சிவயப்பட்ட கிறுக்குத்தனங்கள் தமிழகத்திற்கே உரியவை) தமது கிராமத்திலிருக்கும் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அவ்விதமே அவரது விருப்பமான அணி வெற்றி பெற்றவுடன் 13/05/2011 அன்று தமது காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை நிறைவு செய்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்தன. 

இதை பார்த்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அந்த பெண்மணியை சென்னைக்கு வருவித்து அவரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவர் குணமடைந்தவுடன் அவரை கோட்டைக்கு அழைத்து இது போன்ற அசட்டு செயல்களில் ஈடுபட கூடாது என்று அறிவுரை வழங்கினார். அந்த பெண்மணி கணவனால் கைவிடப்பட்டவர் என்பதும், இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார் என்பதையும் அறிந்து அவருக்கு சத்துணவு உதவியாளர் பணியை வழங்கி கை கொடுத்திருக்கிறார். அதோடுகூட ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி அனுப்பி வைத்திருக்கிறார். உளம் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி சரியாக பேச்சு வராத நிலையிலும் முதல்வருக்கு உணர்ச்சிப்போங்க நன்றிகூறி சென்றார். அரசியல் கிறுக்குத்தனமான இந்த நிகழ்ச்சியில் பொது மக்களாகிய நாம் கவனிக்க வேண்டிய கூறுகள் பல உள்ளன. 

ஒன்று, ஜெயலலிதாவின் செயல்பாடு பற்றியது. தங்கள் சுயநலனுக்காக தொண்டர்களை பலிகொடுக்கும் அரசியல் வாதிகள் பலரிடையே ஜெயலலிதா தனிமைப்பட்டு இருக்கிறார். தொண்டர்களை தீக்குளிக்க செய்து அதில் தம்மை உயர்த்திக்கொள்வார் பலர் உண்டு. பிறகு தீக்குளித்த அந்த தொண்டர்களின் குடும்பங்களை பற்றி அவர்கள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு தமது நாவை அறுத்த அந்த தொண்டருக்கு புத்திமதி கூறியதுடன் அவருடைய குடும்ப நலனை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு பணி வழங்கியுள்ளார். அதோடு அவருக்கு வழங்கிய ஒரு லட்சம் நிதியை அரசு கஜானாவிலிருந்து வழங்காமல் கட்சியால் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நிதியிலிருந்து வழங்கியுள்ளார். அரசுபணியும் நாவை அறுத்துக்கொண்ட நன்றிக்காக என்றில்லாமல் கணவனால் கைவிடப்பட்ட மகளிர் என்ற வகையிலேயே வழங்கியுள்ளார். அப்போல்லோ மருத்துவ மனையில் அவருக்கு அளிக்கப்பட சிகிச்சைக்கான செலவையும் அவரே ஏற்றிருக்கிறார். இதிலும் அரசுபனத்தை துஷ்பிரயோகம் செய்ய வில்லை. இத்தகைய ஜெயலலிதாவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. 

இரண்டு அந்த பெண்மணியை பற்றியது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் விரும்பும் அல்லது நேசிக்கும் தலைவர் உயர்ந்த நிலையை பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் கோடானுகோடி தொண்டர்கள் உள்ள மாநிலம் இது என்பதை நினைவூட்டியுள்ளார். அதற்காக உணர்ச்சி மேலீட்டால் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தமது நாவையே தம் இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக்கியுள்ளார். அவருடைய செயல்பாடு நாகரீகமடைந்த நம் சமுதாயத்தில் கண்டனத்திற்குரியது என்றாலும், அன்பு மேலீட்டால் அவர்கள் செய்த செயலை அத்தகைய அன்பை நாம் அனுபவிக்குமபொழுதுதான் உணரமுடியும். களங்கமற்ற அன்புக்கு இத்தகைய நிகழ்வுகள் உதாரணமாக திகழ்கின்றன. 

மூன்று, அவள் வேண்டிக்கொண்ட தெய்வத்தின் கருணை பற்றியது. கணவனால் கைவிடப்பட்டு, இரண்டு பெண்குழந்தைகளின் கேள்விக்குரிய எதிர்காலத்துடன் கலங்கி நிற்கின்ற பெண்மணி இத்தகைய ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றுகிறாள் எனும் பொழுது கிராமம்தோறும் இருக்கும் காவல் தெய்வங்கள் அவளுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்க்கின்றன. அவளை முதலமைச்சரின் கவனத்திற்கு ஈர்த்து அவளுக்கு ஒரு வேலைவாய்ப்பை வழங்கி அவளுடைய குழந்தைகளின் வாழ்விற்கு வளத்தை சேர்த்திருக்கின்றன. அசைக்க முடியாத பிரதிபலன் கருதாத தெய்வ பக்தி நிறைந்த பலனை கொடுக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி.

No comments:

Post a Comment